தெளிவாக அறிந்து செய்தல்...

அது அவசியமானதா, பயனுள்ளதா?

அது உண்மையானதா, நேர்மையானதா?

அது அன்பானதா, மரியாதையானதா?

அது அறிவுப்பூர்வமானதா, உகந்த தருணமா?

"தெளிவாக அறிந்து" (Clearly Knowing) என்பதை மந்திரம் போல் மனதில் நிறுத்தி, எதை செய்தாலும் தெளிவாக அறிந்து செய்தலை விடச் சிறந்த மந்திரம் இல்லை. ஏனெனில், தெளிவான விழிப்புணர்வு மட்டுமே நம் கையில் உள்ள ஆற்றல். அந்நிலையில் மட்டுமே நாம் திறமையுடன் எதையும் கையாள முடியும், எதையும் கற்றக்கொள்ள முடியும். மற்ற நிலைகளில், நம் செயல்கள், எதிர்கொள்ளும் முறைகள், பேச்சு போன்ற அனைத்தும் இயந்திரதனமாக, தன்னியக்கமாக பழக்கத்தோசத்தில் வெளிப்படுபவை; அது வெறும் அடிமைதனமான வாழ்க்கை. நம் திறமையற்ற செயல்களுக்கும், நம் துயரங்களுக்கும் இதுவே மூலக்காரணம்.

அவசியமானதா, பயனுள்ளதா

அப்படியெனில் அது நம்முடைய அல்லது மற்றவர்களின் நல்வாழ்விற்கு, மகிழ்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், பல சமயங்களில், நமக்கு எது உண்மையான மகிழ்ச்சி தரும் என்று தெரிவதில்லை - ஒரு ஆசைக்கு பிறகு அடுத்தது என்று மனம் போன போக்கில் போய்கொண்டிருக்கிறோம். பயம் கொண்டு, சாதாரண சலிப்பு, தனிமை போன்ற அசௌகரிக உணர்வுகளில் இருந்து தப்பிக்க, பல்வேறு அடிமை பழக்கத்திற்கு ஆளாகின்றோம். அறியாமையின் காரணமாக, பேராசையையும் வெறுப்பையும் மனதில் வளர்கின்றோம் - அவை நமக்கு ஏதோ மகிழ்ச்சியைக் கொடுப்பது போல. பெரும்பாலும் செம்மறி ஆட்டு கூட்டத்தை போல், குருட்டுத்தனமாக கும்பலோடு கும்பலாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையானதா, நேர்மையானதா

உண்மையாக, நம்பகமாக இருப்பது. இதில் சிக்கல் என்னவென்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நடித்து மயக்கிக் கொள்வதில் நாம் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றோம். நம்மால் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்திக் கொள்ள முடியும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க மிகுந்த மனதிடம் மற்றும் தெளிவு வேண்டும்.

அன்பானதா, மரியாதையானதா

நம் மீதும், மற்றவர்கள் மீதும் அன்புடன், இரக்கத்துடன், மரியாதையுடன் இருப்பது. இதில் சிக்கல் என்னவென்றால், பொதுவாக நம்முடைய அன்பு நம் சுயநல தேவையின் வெளிப்பாடாக இருக்கிறது - அதனால் மற்றவர்களை நம் உடைமைகளாக்கி கட்டுப்படுத்துதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை வளர்க்கின்றோம் - இது வெறுப்பு, கோபம், ஆவேசம், குறை காணுதல், குற்றம் சாட்டுதல், விமர்சித்து திட்டுதல் போன்றவைக்கு வழிவகுக்கின்றது. நம் இரக்கம் தன்னை உயர்த்திக்கொள்ளும், சுயமதிப்பை கூட்டிக்கொள்ளும் உத்தியாக அடிமனதில் இருக்கலாம்; அல்லது தன்னை பலிகொடுத்து துயரத்தை அதிகப்படுத்தும் தியாகச் செயலாக இருக்கலாம். பலர் தன்னையே கண்டனம் செய்வது, வெறுப்பது, மேலும் தனக்குத் தானே வலியை கொடுத்து கொள்வது போன்றவற்றையும் அறியாமையினால் செய்கின்றனர்.

அறிவுப்பூர்வமானதா, உகந்த தருணமா

முழுமையாக புரிந்து கொண்டு, திறமையான முறையில் சூழ்நிலைக்கு ஏற்ப இடம், தருணம் அறிந்து செயல்படுவது. இதில் சிக்கல் என்னவென்றால், பல சமயங்களில் நமக்கு உகந்த தருணத்திற்காக காத்திருக்கும் பொறுமை இருப்பதில்லை; அல்லது சரியான சமயத்தில் செயல்படுத்துவதற்கு தைரியம் இருப்பதில்லை; மேலும், சூழ்நிலையை சரியாக அறிந்து கொள்ளுவதற்குத் தேவையான தெளிவு இருப்பதில்லை. பெரும்பாலும், நம் மனம் பயம், பேராசை, கோபம், மாயை போன்றவற்றில் சிக்கி, இருண்டு, குழம்பி போய் இருக்கிறது.

இந்த கேள்விகளை வழிகாட்டுதல்களாகப் பயன்படுத்தி, ஒரு செயல் ஆரோக்கியமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறதா (அமைதி, மகிழ்ச்சி, அன்பு, நல்லிணக்கம் ...) அல்லது ஆரோக்கியமற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கிறதா (மன அழுத்தம், துன்பம், வெறுப்பு, மோதல்கள் ...) என்பதை நாம் கண்டு கொள்ளலாம். இதை நாம் பிரதிபலிக்க கூடிய மூன்று வகையான நம் செயல்கள்:

  • உடல் செயல்கள் [செயல்]

  • வாய்மொழிச் செயல்கள் [பேச்சு]

  • மனச் செயல்கள் [சிந்தனை]

இவற்றை நாம் பிரதிபலிக்க வேண்டிய மூன்று நிலைகள்:

  • எந்த ஒரு செயலையும் செய்ய விரும்பும் போதெல்லாம்,

  • அதைச் செய்யும் போதும்,

  • மற்றும் அதைச் செய்த பின்னும்.

தொடர்ந்த பயிற்சி மற்றும் பிரதிபலிப்பின் மூலம், நம்முள் ஆரோக்கியமான செயல்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமற்ற செயல்களை கைவிட முடியும்.

தெளிந்தறிநிலை என்பது அறிவார்ந்த, அன்பான அறிநிலை. வாழ்கையை நாம் தெளிவான அறிவுடன் அக்கறையாக அணுகும் போது, நமது செயல்கள் இயல்பாகவே நமது நல்வாழ்விற்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.

——

CK. காமராஜ்

14 ஜனவரி 2019 (தமிழ்)

13 டிசம்பர் 2017 (English)