அஞ்சுவது அஞ்சல் அறிவார் செயல்


"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்." — குறள்


அனைத்து உயிர்களுக்கும் பயம் உண்டு, ஏனெனில் உயிர் என்பது பிழைத்திருப்பதற்கான ஒரு போராட்டத்தின் வெளிப்பாடு. எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் பயம் இருந்தாலும், உணர்ச்சிகளை கொண்ட பாலூட்டிகளுக்கு அதை உணரமுடியும்; மனிதனால் உணருவதை தாண்டி அதை அறிந்து/புரிந்து கொள்ள முடியும். அதை முறையாக புரிந்து கையாளாத போது, அது மனவியல் பயமாக பூதாகரமாகின்றது. அறியாமை முறையற்ற பயத்தின், தேவையற்ற ஆசையின், அதனால் ஏற்படும் ஆணவத்தின் அடிப்படை.


நுண்ணியிர்களின் விளைவுகளைப் பற்றிய புரிதல் ஒன்றும் புதிதில்லை. நான் எட்டாவது படிக்கும் போது, நுண்ணியிர்களால் ஏற்படும் தொற்று நோய்களை பற்றியும், அதனால் ஏற்படும் உலகளாவிய விளைவுகளை பற்றியும் படித்திருக்கின்றேன். அக்கட்டுரை கூறியது: மனிதன் அவனுக்குள்ளே அடித்து கொண்டு இருந்தாலும், அவனுடைய உண்மையான எதிரி நுண்ணியிர்களே! (எல்லா நுண்ணியிர்களும் அல்ல; நம் உயிர் காக்கும் பல நுண்ணியிர்களும் உண்டு). அதை முறையாக அறிந்து கொள்வது அறிவார் செயல். ஹாலிவுட் படம் போல, நம் விளையாட்டுகளை போல வெளித்தோற்றத்தை கண்டு மயங்குவது சாதாரணம்; நுண்மையானவற்றின் ஆற்றலை, சிறியவற்றின் சீற்றத்தை உணர்ந்து கொள்வது அறிவார் செயல்.


ஒரு பக்கம் கும்மாளம் போட்டுக்கொண்டும், மறுபக்கம் அடித்துக்கொண்டும் நம் ஆற்றலை தேவையற்றவற்றில், மூடநம்பிக்கைகளில் செலவழித்து கொண்டுள்ளோம். ஆனால் அதன் விளைவுகளை ஏற்க மறுக்கின்றோம்.


"துயரத்தை கண்டு மனம் சுருங்கும் நாம்,

அதன் காரணங்களை நேசிப்பது ஏனோ?

என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்!" — சாந்திதேவா

——

CK. காமராஜ்

22 மே 2021