பயமேன் மனமே

ஒரு மனித இனமாக நாம் யார்?

ஒரு தனி நபராக நாம் யார்?

அதை நேர்மையாக பார்ப்பாயா?

அதை தைரியமாக அணுகுவாயா?

நிபந்தனையற்ற அன்புடன்

நகைச்சுவை உணர்வுடன்


வாழ்க்கையின் வானவில் வண்ணங்கள்:

இன்பம், துன்பம்; நிம்மதி, துக்கம்; சுகம், வலி...

ஒவ்வொரு வண்ணத்தையும் ஏற்பாயா?

அனுபவங்கள் அனைத்திற்கும் இடம் தருவாயா

தெரியாததற்கும், புரியாததற்கும் இடம் ஒதுக்குவாயா

மனதில் எதுவும் உறைந்து போகாமல்,

உள்ளது உள்ளபடியே தங்க வைப்பாயா?

வாழ்வின் உண்மை விளிம்பில் தங்குவாயா?

திறந்த மனதுடன் இங்கு, இப்பொழுது!


கடும் துயர நேரத்தில்,

ஏக்கத்தின் உச்ச வாட்டத்தில்,

இதயத்தின் கனத்த வலியில்,

மனதை சற்றே இளைப்பாற்றி

இதயத்தின் ஆழத்தை தொடுவாயா?

இதயம் இறுகி கடினமாகாமல்...

மேலும் மெல்லத் திறப்பாயா?


பயம் உயிருடன் இருப்பதன் அங்கம்

தெளிவாக பயம் அறியாமல்,

பயமின்மை இல்லை, தைரியம் இல்லை

அதை நேரடியாக உணர்வாயா?

நெருங்கிச் சென்று அறிவாயா?

நேருக்கு நேர் எதிர்கொள்வாயா?


வலி வாழ்வின் நிதர்சனம்

மாற்றம் உலகின் நிதர்சனம்

எதுவும் இங்கு நிரந்தரமில்லை

அதை அச்சமின்றி ஏற்பாயா?

அதற்கேற்ப வாழ்வை கற்பாயா?

எதற்கு இந்த போராட்டம்?

தப்பிக்க வேறு வழியில்லை

நம்பி எந்த பயனுமில்லை


இங்கே பிடிமானம் எதுவும் இல்லை

வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை

இந்த உலகம் தவிர வேறு நிதர்சனம் இல்லை

பயந்து ஓடி ஒளிந்து போதும்

பலிக்கடாவாக ஏமாந்தது போதும்

கூட்டை விட்டு வெளியே வருவாயா?

இப்பொழுதாவது வளர முனைவாயா?

நம்பிக்கை இருந்தால் பயமும் இருக்கும்

அதே நாணயத்தின் அடுத்தப் பக்கம்!

நேற்று முடிந்த கதை, நாளை வெறும் கனவு

அர்த்தமுள்ள ஒரே கணம் இப்பொழுது

நம்பிக்கை இக்கணத்தை திருடும்

விலைமதிப்பற்ற இக்கணத்தை வீணாக்கும்


ஏமாற்றம், சங்கடம்...

எரிச்சல், வெறுப்பு...

கோபம், ஆவேசம்...

தவிப்பு, பொறாமை...

தனிமை, பயம்...

இவை கற்பிக்கும் தருணங்கள்

நம் வரம்புகளை நாம் தொடும் இடம்

இறந்து மறுபடியும் பிறக்கும் இடம்

ஒரு புதிய தொடக்கம் சாத்தியமாகும் இடம்


நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை

ஆனால் இழப்பது போன்ற உணர்வுடன்...

பரிணாம வடிவமைப்பை கொண்டோம்

பயம் வேண்டாம் மனமே...

மெல்ல அத்தருணங்களைப் பிடிப்பாயா?

தைரியமாக அவற்றை தொடுவாயா?

அன்புடன் அவற்றை செல்லவிடுவாயா?

தேர்ச்சியுடன் திறமை வளர்த்து...

மறுபடியும் இங்கு, இப்பொழுது வர

விழிப்புணர்வு விதைகளை விதைக்க

துயரங்களில் இருந்து விடுதலைப் பெற

பல தலைமுறையின் சுமைகளை இறக்கி வைக்க

அடையாளப் புள்ளியற்ற புதிய உலகம் காண...

அது வெளிப்படையான சுதந்திர உலகம்

தன்முனைப்பற்ற ஆனந்த உலகம்

தெளிவு கண்ட அமைதி உலகம்

முழுமையாக விழித்துக் கொண்ட உலகம்

——

CK. காமராஜ்

16 ஜனவரி 2019 (தமிழ்)

ஜூலை 2013 (English)