ஹோடெய் கேட்கிறார்

வாழ்க்கையுடன் ஏன் இந்த போராட்டம்?

நிதர்சனத்தை எதிர்த்து ஏன் இந்த மோதல்?

வானமும் பூமியும் உனக்காக திறந்தே இருக்கு

அன்பும் அமைதியும் உன் அருகிலேயே இருக்கு

சந்தோசமும் சிரிப்பும் உனக்காக காத்திருக்கு

நிபந்தனைகள் வைத்து ஏன் எதிர்கின்றாய்?

கோரிக்கைகள் வைத்து ஏன் நிராகரிக்கின்றாய்?

பயம் கொண்டு ஏன் மூடிக்கொள்கின்றாய்?


மனதில் ஏன் இந்த அழுத்தமும் இறுக்கமும்?

எதை சாதிக்க இந்த அலங்கோலம்?

எதை நிரூபிக்க இந்த பரிதாபம்?

மனதில் ஏன் இத்தனை பாரம்?

அதை சுமந்து அலைவதில் என்ன பயன் கண்டாய்?

அதை இறக்கி வைக்க ஏன் இத்தனை தயக்கம்?


ஏன் இந்த எரிச்சலும் வாட்டமும்?

நீ விளையாடி அனுபவிக்க என்ன தடை?

உன் அகமலர்ந்த நடனத்தை தடுப்பது எது?

உன் முகமலர்ந்த சிரிப்பை முடக்குவது எது?


மிக எளிது, துயரம் கொண்டு துவண்டு விழ

மிக்க தைரியம் வேண்டும், சுதந்திரமாய் பறக்க!

மிக எளிது, சோகத்தில் வாட

மிக்க தைரியம் வேண்டும், வாய்விட்டு சிரிக்க!

——

CK. காமராஜ்

21 ஜனவரி 2019 (தமிழ்)

31 டிசம்பர் 2018 (English)

ஹோடெய் என்பவர் சீனாவில் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவர் கிராமம் கிராமாக சென்று, அங்குள்ள முக்கிய சந்தைக்கு நடுவில் நின்றுகொண்டு குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் போன்றவற்றை கொடுத்து விட்டு, நன்றாக வாய் விட்டு சிரிப்பார். அது ஆழ்மனதிலிருந்து வரும் உண்மையான, ஆத்மார்த்தமான சிரிப்பாக இருப்பதால், அருகில் இருப்பவர்களையும் சிரிக்க வைத்தது. அவரது ஒரே செய்தி: நீங்கள் தேவையில்லாமல் வாழ்க்கையை போராட்டமாக்கி துன்பப் படுகின்றீர்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லை, நன்றாக வாய் விட்டு சிரியுங்கள்!