மன வைரஸ்களின் பரவல்

கணினி சார்ந்த வைரஸ்கள், உடல் சார்ந்த வைரஸ்கள், மனம் சார்ந்த வைரஸ்கள் என பல வகைகள் உண்டு. மனம் சார்ந்த வைரஸ்களுக்கு மீம்கள் (Memes) என்று பெயர். இவை ஒருவரின் மூளையிலிருந்து மற்றோருவரின் மூளைக்கு கருத்துக்களாக, எண்ணங்களாக பேச்சு, உடல்-மொழி, எழுத்து என பல வகையில் பரவி, பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. கெட்ட மீம்கள் நம்மை தொற்றிக் கொள்வதற்கான நம்மிடமுள்ள மூன்று முக்கிய பலவீனங்கள்: அறியாமை, பயம், ஆசை. இப்படியே மூடநம்பிக்கைகள், வதந்திகள் போன்றவை பரவுகின்றன. இதனால் பலவகையான சமுதாய வியாதிகள் பெருகி கிடக்கின்றன.

கெட்ட மீம்கள் தொற்றிக் கொள்ளாமல் இருக்க, முதலில் பயத்திற்கும், பேராசைக்கும் இடம் கொடுக்காமல், நம் மனதை பாதுகாத்து கொள்ள வேண்டும். அறியாமையிலிருந்து விடுபட மனது தெளிவு காண வேண்டும்; தெளிவு என்பது அமைதியில் இருந்து வருவது; அப்படிப்பட்ட தெளிவிலிருந்தே முறையான புரிதலும், அறிவும் ஏற்படும். மற்றவையெல்லாம் அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.

குழப்பமும் நிலையின்மையும் ஏற்படும் போது, மனதில் பாதுகாப்பின்மையும் பயமும் வந்துவிடுகின்றது. அதிலிருந்து விடுபட்டு நிம்மதி காண, பல்வேறு நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அதற்கு அடிமையாகி விடுகின்றோம். ஆனால் அதை நாம் தைரியத்துடன் முழுமையான தெளிந்தறிதலுடன் அணுகி அமைதிகாக்கும் போது, அதிலிருந்து தெளிவும் புரிதலும் பிறக்கும்; அதிலிருந்தே நம்முடைய திறனான செயல்கள் வெளிப்பட முடியும்.

கெட்ட மீம்கள் பரவுவதை தடுப்பது நம்முடைய ஒவ்வொருடைய கடமை. அதை நமக்காகவும், நம் சமூகத்திற்காகவும் செய்ய வேண்டும். முதலில் கண்டபடி, சகட்டு மேனிக்கு செய்திகளை பரப்புவது நமக்கு நன்மை தருவதில்லை. இந்த தகவல்-யுகத்தில், தேவையற்ற இரைச்சலை குறைப்பது மிக முக்கியம். அதிகமான தகவல் சுமை (Information Overload) நம் தெளிவை அழிப்பதோடு, நம் உடல், மன நலனையும் கெடுக்கும்.

நாம் முறையாக செய்திகளை, கட்டுரைகளை, புத்தகங்களை படிப்பதே நன்மை பயக்கும்; தேவையற்ற குறுஞ்செய்திகளை பரப்புவதை தவிர்க்கலாம்.

சுட சுட செய்திகளை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக அணுவதே உகந்தது.

ஒரு செய்தி முழுமையாக உண்மை என்று தெரிமால் பரப்புவது நல்லதல்ல. ஒரு விசயம் முழுமையாக புரியாமல் பரப்புவதும் நல்லதல்ல. சந்தேகமாக இருந்தால் பரப்பாமல் இருப்பதே நல்லது.

அடுத்தவர்களை குறைகூறுவதையும், அரசியல்வாதிகளை திட்டுவதையுமே ஒரு பொழப்பாக செய்வது இங்கு ஒரு பெரிய சமூக வியாதியாக உள்ளது; அது நம் ஈகோவை வளர்க்க உதவுமே தவிர, நன்மை எதுவும் பெரியதாக இல்லை; அது எதிர்வினைகளையே மேலும் வளர்க்கின்றது.

தகராறுகளிலும், சர்ச்சைகளிலும் ஈடுபடுவது மேலும் குழப்பத்தை அதிகப்படுத்துமே தவிர, தீர்வு தருவதில்லை. நம்முடைய கருத்துக்கள் தெளிவையையும், புரிதலையும் நோக்கி இருப்பது நன்று. அது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நோக்கி இருப்பதும், தேவையற்ற கடும் சொற்களை தவிர்ப்பதும் நன்று.

சொற்களின், செய்திகளின் ஆற்றல் மிக அதிகம், அதன் விளைவுகள் மிக அதிகம். அது வாழ்வை உடைக்கலாம், எதிரிகளை உருவாக்கலாம், போர்களைத் தொடங்கலாம், அல்லது தெளிவை, அறிவை தரலாம், அன்பை, இணக்கத்தை உருவாக்கலாம், நம் வலிகளை போக்கலாம். அதை கவனமாக கையாள பழகுவோமாக!

——

CK. காமராஜ்

02 ஏப்ரல் 2020