அணுகுமுறை தடைகள், படுகுழிகள்

அணுகுமுறை தடைகள்

நாம் கலைகள், விளையாட்டு, அறிவியல், கணிதம், பொறியியல், மருத்துவம், வணிகம் போன்றவற்றை கற்பதற்கும், கற்பிப்பதற்கும் அதிக சிரத்தை எடுத்ததுக் கொள்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையின் மிக முக்கியமான அடிப்படை அம்சங்களான - நமது உணர்ச்சிகள், நம் இன்ப துன்பங்கள், நம்முடைய நல்வாழ்வு - போன்றவற்றை முறையாக, ஆழமாக அறிந்து கொள்வதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கணினி, விமானம், அணுகுண்டு, இராக்கெட், செயற்கைகோள்... என்று ஒரு பக்கம் புத்திசாலித்தனமாக போய்கொண்டிருந்தாலும், மறுபக்கம் நம் உணர்ச்சிகளை கையாளுவதில் இன்னும் அப்படியே சிறுபிள்ளைத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக, மூடத்தனமாக இருக்கின்றோம்.

தெளிந்தறிநிலை என்பது நம் மகிழ்ச்சிக்கும் நலனுக்கும், நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமான பரிசு. அதை சரியாக நாம் உணரும் போது, அது நமது சமுதாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாக இருக்கும்; உலகம் அமைதியான இணக்கமான இடமாக இருக்கும்.

நாம் அதை சரியாக உணராததிற்கு காரணம், தெளிந்தறிநிலை பற்றிய விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் கடினம் என்பதால் அல்ல; அதன் எளிமையே அதன் தடை. அந்த எளிமைக்குப் பின்னால், அது மிகவும் மென்மையாக, நுட்பமாக இருப்பதால், ஆழமாக சென்று முழுமையாக உணர்ந்து கொள்ள நுண்ணுணர்வு தேவைப்படுகிறது. அதன் மேலோட்டமான எளிமையில் பெரும்பாலானோர் கோட்டைவிட்டு விடுகின்றனர். அது நம் உட்புற மனநிலையைப் பற்றியது என்பதால், அதை வார்த்தைகள் கொண்டு விளக்குவது கடினமாகிறது. அப்படியே விளக்கினாலும், அது தெளிவற்ற மங்கிய நிலையிலேயே இருக்கிறது. மேலும், இந்த பயிற்சிகள் பல்வேறு மூடத்தனங்களிலும், சடங்குகளிலும் சிக்கி நிலைமையை இன்னும் மோசமாக்கி குழப்புகின்றன.

வெளிப்புற வளர்ச்சி மற்றும் அதன் பலன்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்வதால், பணம், அதிகாரம், புகழ் போன்ற வெளிப்புற காரணிகளில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அவற்றிற்கு பின்னால் உள்ள போராட்டங்கள், அவலங்கள், துன்பங்கள் மற்றும் அர்த்தமற்ற தன்மையை தெளிவாக உணர்ந்து கொள்ள நேரமும், நுண்ணறிவும் தேவை. ஆனால், அமைதி, சமாதானம், மகிழ்ச்சி போன்ற உட்புற மன வளர்ச்சியை எளிதாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை - குறிப்பாக ஆரம்ப கட்டங்களில். மேலும், அதன் பலன்கள் நமக்கு நேரடியாக புடிபடுவதில்லை.

சுகம், கிளர்ச்சி, போதை, நிவாரணம் போன்றவை கிடைக்கும் போது, அது திடீரென்று அதிகரிப்பதை நம் மூளை எளிதில் உணர்ந்து கொள்ளும். அது மூளையில் வெகுமதி-வலுவூட்டலுக்கு வழிவகுத்து, அதை மீண்டும் செய்ய நம்மை ஊக்குவிக்கும். ஆனால் இந்த உணர்வின் மேன்பட்ட நிலை அதிக நேரம் நீடிப்பத்தில்லை; மீண்டும் நாம் பழைய நிலைக்கே வந்துவிடுவோம். அதுமட்டும் இல்லாமல், அதன் மேல் நமக்கு இன்னும் அதிகமான ஏக்கமும், அடிமைத்தனமும் ஏற்படும். இதற்கு நேர்மாறாக, தெளிந்தறிநிலை பயிற்சிகளின் மூலமாக கிடைக்கும் பலன்கள் படிப்படியாக மெதுவாக ஏற்படுகின்றன, எனவே அது வெகுமதி-வலுவூட்டலுக்கு உடனடியாக இட்டுச் செல்வதில்லை. எனவே நம்மை ஊக்குவித்து, தொடர்ந்து அவற்றை செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இப்பயிற்சிகளின் நிலைத்த, நீடித்த வளர்ச்சியை உணர்ந்து கொள்வதற்கு கால அவகாசமும், நுண்ணுணர்வும் தேவைப்படுகிறது. அதற்கு முறையான ஒழுக்கமும், வலுவான உறுதிப்பாடும் அவசியம்.

பொதுவான படுகுழிகள்

பேராசைகள் மற்றும் சாதாரண சலிப்பு, தனிமை போன்ற அசெளகரியங்களைக் கூட எதிர்கொள்ள இயலாத பயம் தான் நம் மனதில் ஏற்படும் அனைத்து வகையான கோபதாபங்கள், எரிச்சல்கள், குழப்பங்கள் போன்றவற்றிற்கு காரணம். இவை நமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை முடக்கி துன்பத்திற்கு இட்டுச்செல்கின்றன.

பிறகு, பல்வேறு தியான முறைகளை பற்றியும், அவற்றின் பயன்களைப் பற்றியும் கேள்விபடுகின்றோம். ஆனால், நம் துன்பத்தின் மூலக் காரணங்களை பற்றி தெளிவான புரிதல் இல்லாமல், இம்முறைகளை அதே பழைய தெளிவற்ற நிலையிலிருந்து அணுகுகின்றோம். அதனால் நம் பிரச்சனைகளை அடக்கி, மறைத்து தப்பித்துக்கொள்ளும் மற்றொரு போதை பொருளாக அல்லது தற்காலிக வலி நிவாரண பொருளாக இப்பயிற்சிகள் ஆகிவிடுகின்றன. அப்படிப்பட்ட பயிற்சிகள் மற்றும் கோட்பாடுகள் தான் நமக்கு எளிதாக புடிபடும். எனவே நாம் பலவிதமான திறமையற்ற சத்த, காட்சிப்படுத்தல் போன்ற முறைகளிலும், தேவையற்ற சடங்குகளிலும், ஆன்மிக-பொருளாசைகளிலும், மூடநம்பிக்கைகளிலும் விழுந்துவிடுகின்றோம்.

தெளிந்தறிநிலை மற்றும் தியான பயிற்சிகளின் காரணங்களை அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்வது முக்கியம். இதில் எவ்வித குருட்டு நம்பிக்கைக்கும் இடமில்லை. தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும், அடக்கிவைக்கும் உத்திகளில் விழுந்துவிடாமல், அவற்றை தாண்டி முறையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு நோக்கி செல்ல வேண்டும். ஒரு சரியான மருந்து, நமக்கு அடிப்படையில் தீங்கு விளைவிக்கும் மனமாசுகளை சரியாக புரிந்து கொண்டு அழிக்க உதவவேண்டும்.

ஒரு முறையான தெளிந்தறிநிலை பயிற்சி மயக்க மருந்து இல்லாமல் நடைபெறும் ஒரு அறுவை சிகிச்சை போன்றது. எனவே, தெளிவு மற்றும் ஞானத்தை நோக்கிய பயிற்சி வழிமுறைகளை முறையாக வழிகாட்டும், ஒரு தேர்ந்த ஆசிரியரை அணுகுவது மிகவும் நல்லது.

இந்த பயிற்சிகளைப் பற்றிய தவறான, தெளிவற்ற, அரைகுறை புரிதலை கொண்டு, பலர் தவறான அல்லது அரைவேக்காட்டு முடிவுக்கு வருகின்றனர். அவர்கள் எதார்த்தமற்ற, நடைமுறைக்கு ஒத்துவராத அணுகுமுறையை உருவாக்கி, அதனால், பயிற்சியை விட்டுவிடுகின்றனர், அல்லது எதிர்காலத்திற்கு ஒத்திவைகின்றனர், அல்லது முன்னேற்றம் இல்லாமல் சிக்கி கொள்கின்றனர். சரியான புரிதல் மற்றும் முறையான பயிற்சியுடன் அணுகும்போது, தெளிந்தறிநிலை முற்றிலும் புதிய பரிமாண நிலைமாற்றம் செய்யவல்லது!


அன்பு வாழ்த்துக்களுடன்,

CK. காமராஜ்

16 ஜனவரி 2019 (தமிழ்)

14 டிசெம்பர் 2017 (English)

மேலும் படிக்க: