தெளிந்தறிநிலை சுய-ஒழுக்கம்

சுய-கட்டுப்பாடு ஏன் கடினமாக உள்ளது?

நம் நல்வாழ்வுக்கு எது சிறந்தது என்று, நாம் எல்லா நேரமும் "அறிந்து", அதன்படி "செயல்பட" முடிந்தால், நாம் சுய-கட்டுப்பாடு அல்லது புத்தாண்டு தீர்மானங்களை பற்றி பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் நமது மூளை பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு உயிரின வடிவங்களிலும் சூழல்களிலும் பரிணாம வளர்ச்சிப் பெற்றது. எனவே, நம் தலையில் காடு போன்று பல்வேறு வகையான நிரல்களை (programs) சுமந்து கொண்டுள்ளோம் - அவைகளின் தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனங்களுடன். நம்முடைய ஒரு பகுதி ஏதாவது ஒன்றை விரும்பலாம், ஆனால் மற்றோரு பகுதி வேறொன்றை நோக்கி கவர்ந்து இழுக்கலாம்; ஒரு பகுதி ஒரு நீண்டகால இலக்கை நாடலாம், மற்றொரு பகுதி உடனடி ஆசையை திருப்திபடுத்த முனையலாம்; ஒரு பகுதி ஏதாவது ஒன்றிற்கு அசைப்படலாம், இன்னொரு பகுதி அதை தொடர பயப்படலாம்; ஒரு பகுதி சோகமாக இருக்கலாம், இன்னொரு பகுதி சோகமாக இருப்பதற்காக கோபம் அடையலாம், மற்றும் இன்னொரு பகுதி கோபமடைவதைக் குறித்து கோபப்படலாம். இவ்வாறு நம் மனம் பல வகையில் சிதறுண்டு இருக்கிறது.

பல்வேறு பணிகளை மூளையில் உள்ள பல்வேறு நிரல்கள் கையாண்டு செயல்படுத்துகின்றன. சூழ்நிலைகளை பொறுத்து, இந்த நிரல்கள் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து செயல்படுத்துகின்றன, மற்ற சில நேரங்களில் போட்டியிடுகின்றன. ஆனால் ஒரு நிரல் "நேரடியாக" மற்றொரு நிரலை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாது என்றவாறே மூளை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால், அப்படிப்பட்ட "நேரடித் தன்மை" மிகவும் ஆபத்தானது - உதாரணமாக, "தூக்கம்" அல்லது "வலி" போன்றவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்ப, வேண்டிய நேரத்தில் நிறுத்திக் கொள்வது; நம்மையே நாம் எளிதாக அழித்து கொண்டுவிடுவோம். இருப்பினும் பலர் ஆபத்தான போதை பொருட்களை (சில வலிகளை குறைக்க அல்லது சுகங்களை அனுபவிக்க) எடுத்துக் கொள்வது போன்ற பல வழிகளில் தங்களையே அழித்து கொள்கின்றனர்.

சுய-கட்டுப்பாடு கடினமாக உள்ளதற்கு காரணம், நிரல்களை "நேரடியாக", எளிதாக கட்டுப்படுத்தவோ, மாற்றவோ வழி இல்லை. நாம் "மறைமுக" அணுகுமுறையைப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறே வெகுமதிகள், தந்திரங்கள், லஞ்சங்கள், ஏமாற்றுவேலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியும்... நம்பிக்கைகள் மற்றும் தர்க்க முறைகள் போன்றவற்றை கொண்டு நம்பவைத்தும்... பேராசை மற்றும் அச்சம் போன்றவற்றை கொண்டு தூண்டிவிட்டும் நம்மை நமே கட்டுப்படுத்த கற்றுக்கொள்கின்றோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் எப்படி அடுத்தவர்களை கட்டுப்படுத்த, வசப்படுத்த, ஏமாற்ற முனைகின்றோமோ அப்படியே சுய-கட்டுப்பாடும். இந்த உத்திகள் நமக்குள் ஊறி ஒன்றி விட்டதால், பெரும்பாலும் இவற்றை நாம் வெளிப்படையாக உணர்வதில்லை.

சுய-கட்டுப்பாடும், சுய-ஒழுக்கமும்

மனபலம் போன்ற சுய-கட்டுப்பாடு உத்திகளை நீண்ட நாட்களுக்கு தக்கவைத்து தாக்குப்பிடித்து பொதுவாக கடினமானது. சந்தோசம், ஆறுதல், நிம்மதி தரும் பலவகையான தந்திரங்கள், ஏமாற்று வித்தைகள் பயன்தருவது போல் இருந்தாலும், போதை பொருட்களுக்கு அடிமையாவது போல் மக்கள் அவற்றில் பல தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளுடன் சிக்கிக் கொள்கின்றனர். உலகில் உள்ள பெரும்பாலான துன்பங்கள், சச்சரவுகள், குழப்பங்கள் மற்றும் சண்டைகள் இந்த உத்திகளில் வேரூன்றி இருக்கின்றன!

மனம் சிதறுண்டு இருப்பதே அடிப்படை பிரச்சனை - அது இணக்கம் மற்றும் அமைதிக்கு எதிர்மறையானது. பொதுவான சுய-கட்டுப்பாடு உத்திகள் இந்த சிதறுண்ட நிலைகளை மேலும் பலப்படுத்துகின்றன. சரி/தவறு, நல்லது/கெட்டது, புண்ணியம்/பாவம், புனிதமானது/தீட்டு என்று பிரித்து நாம் பாகுபடுத்தும் வரை, அதை தொடர்ந்து பலப்படுத்துகிறோம். நாம் ஏதாவது ஒன்றன் பின்னால் ஆசையில் ஓடும் வரை (மோகம்/பேராசை) அல்லது மற்றொன்றை எதிர்த்து ஓடும் வரை (விரோதம்/வெறுப்பு), அதை தொடர்ந்து வலுப்படுத்துகிறோம். தெளிவான புரிதல் இல்லாமல் வெறும் மனப்பலத்தை கொண்டு, முரட்டுத்தனமாக கட்டுப்படுத்த முயலுகின்ற வரை, அதை தொடர்ந்து வலுப்படுத்துகிறோம்.

ஒரு திறமையான அணுகுமுறை மனதின் அனைத்து பாகங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி மனதில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அது ஒரு ஒட்டுமொத்த, நீடித்த ஆரோக்கியத்தை சார்ந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும். தெளிந்தறிநிலை அப்படிப்பட்ட ஒரு சுய-ஒழுங்குமுறை அல்லது பயிற்ச்சி முறையாகும். இது திறந்த மனப்பான்மையுடன் கவனித்து கற்றுக்கொள்ளும் முறை. இங்கு, கட்டுப்படுத்தி, அடக்குவதற்குப் பதிலாக, நம்மை ஆசுவாசப் படுத்தி அந்த அலைகளின் மீது பயணிக்க கற்றுக்கொள்கிறோம்; வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளால் இடிந்துபோய் விடாமல், அவற்றின் மீது சவாரி செய்ய கற்றுக்கொள்கிறோம்; கண்மூடித்தனமாக மனப்பலத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக, தெளிவான முறையில் நம் நுண்ணறிவின் பலத்தை பயன்படுத்துகிறோம்!

வாழ்த்துகள்!

——

CK. காமராஜ்

21 ஜனவரி 2019 (தமிழ்)

28 டிசம்பர் 2018 (English)