சுதந்திரமாய் பறக்க

அன்பும் அறிவும் நம் வாழ்க்கைக்கு பறவையின் இரண்டு இறக்கைகளைப் போன்றது. அதில் எந்த ஒன்று குறைந்தாலும், வாழ்க்கை முடமாகிவிடுகிறது. "ஒரு நல்வாழ்வு அன்பினால் உந்தப்பட்டு, அறிவினால் வழிநடத்தப்பட வேண்டும்" — பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

அன்பு

பலநேரம் சந்தோசத்தை நாம் தவறான இடங்களில், தவறான வழிகளில் தேடினாலும், அடிப்படையில் நம் அனைவருக்கும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இது அன்பின் அடிப்படையான ஆரம்ப புள்ளி. வாழ்க்கை எந்த நொடியிலும் முடிந்துவிடக்கூடிய மென்மையான, விலைமதிப்பற்ற ஓன்று - அதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளும் போது, ​​நம்மையும் மற்றவர்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி அன்பு செலுத்த கற்றுக்கொள்ளலாம். அன்பு என்பது ஒரு வெளிப்படையான மனநிலை - அது மகிழ்ச்சியின் ஆதாரம். வெறுப்பு என்பது மிகவும் கனத்த, ஒரு அடைப்பட்ட மனநிலை - அது வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும் உறிஞ்சிவிடும்.

அறிவு

அன்பு மிக அவசியமானது என்றாலும், அறிவு தான் நம்மை தெளிவானப் பாதையில் வழிநடத்தி, வாழ்வின் உச்சநிலைக்கு இட்டுச்செல்கின்றது.

"அறிவற்ற அன்பு நன்மை தரா! அறிவற்ற நம்பிக்கை கேடு!"

ஆனால் அறிவு என்பது வெறும் செய்திகளை சேகரிக்கும் தகவல்-புலமை அல்ல. பொதுவாக நம் தகவல்-புலமைகளும், நம்பிக்கைகளும் மற்றவர்களிடம் இருந்து சேகரித்த, கடன் வாங்கிய விசயங்கள் - நம்முடைய சொந்த புரிதலோ, ஞானமோ அல்ல. எந்த ஓன்றையும் தெளிவான, ஆழமான புரிதலை நோக்கி எடுத்துச் செல்லும் போது, அது நம் உண்மையான அறிவை, ஞானத்தை கண்டுகொள்ள வழிவகுக்கிறது. தகவல்-புலமை என்பது செய்திகளை நம் மூளையின் ஒரு மூலையில் சேமித்துவைப்பது; ஞானம் என்பது நம் மொத்த உருவாகிவிடும் ஒன்று. ஞானத்தின் மூலமாக, நாம் வெளிப்படைத்தன்மை மற்றும் அன்பின் ஆற்றலையும் அழகையும் கண்டுகொள்கின்றோம்; அர்த்தமற்ற, தீங்கு தரும் தற்காலிக ஆசை, சுகங்களுக்கு பலிகடா ஆவதற்குப் பதிலாக, ஒழுக்கத்தின் அவசியத்தையும், அது தரும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்கின்றோம்; உண்மையான தைரியம், அச்சமின்மையை கண்டுகொள்கின்றோம்; இறுதியாக அடிமைத்தனத்திலிருந்து, அதன் சங்கிலிகளிலிருந்து விடுதலை காண்கின்றோம்.

குறிப்பு: ஒரு மார்க்கத்தில் பயணம் தொடங்குவதற்கு, நமக்கு ஓரளவு நம்பிக்கை, உறுதி தேவை. அந்த பாதையில் முன்னேற்றம் கண்டு, மேலும் நன்கு புரிந்து கொள்ளும் போது, நமது நம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கும். ஆனால், குருட்டு நம்பிக்கைகள் நமது அறிவு வளர்ச்சிக்கும், ஞானத்திற்கும் ஒரு பெரிய தடை இருந்து, அது நம்மை கடுமையாக முடக்கி விடும். நம்பிக்கைகள் பெரும்பாலும் நம் பயத்தை, அறியாமையை, மயக்கத்தை மூடி மறைக்கும் ஒரு உத்தி; நம்மை நமே தேற்றி ஒத்துக்கொள்ளும், நம்பவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி. அதன் ஆழத்தில் எப்போதும் சந்தேகம் இருக்கும். நம் சந்தேகத்தை மறைக்க முயற்சி செய்யலாம், ஆனால் நம் நிலை எப்பொழுதும் தடுமாற்றத்திலே இருக்கும். உண்மைக்கும் நம்பிக்கைகும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நம் நேரடியான தெளிவான அறிவே, நமக்கு விடுதலை அளிக்கும்.

ஆற்றல்

அன்பும் அறிவும் நம் வாழ்வின் இரண்டு இறக்கைகள் என்றாலும், அவற்றை விட அடிப்படையாக, அவற்றை இயக்க ஒரு நிலையான ஆற்றல் வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உடலும் மனமும் அவசியம். மேலும் நம் ஆற்றலை தேர்ந்த முறையில் பயன்படுத்துவது முக்கியம். ஆனால் நாம் கோபம், ஆவேசம், வெறுப்பு, பொறாமை போன்ற பல வழிகளில் நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். மேலும் கனத்த கடந்த கால குப்பை மூட்டையையும், எதிர்கால கனவு மூட்டையையும், நிகழ்கால பொறுப்பு சுமைகளையும் தூக்கி கொண்டு அலைகின்றோம் (இவற்றை இழுத்துக் கொண்டு செல்வதே பெரிய காரியம், இதில் எங்கே சுதந்திரமாகப் பறப்பது?). எனவே, முதலில் நம் கட்டுப்பாடற்ற, சஞ்சலமான மனதை அமைதி நிலைப்படுத்தி அதன் இயல்பான தெளிவை, ஆற்றலை, அறிவை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் தேவையற்ற மூட்டைகளையும், சுமைகளையும் இறக்கி வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

துணிவு

மகிழ்ச்சியின் இரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் இரகசியம் தைரியம்! ஆனால், நாம் பயத்தில் உயிரை கெட்டியாக பிடித்துக் கொண்டு வாழ்கின்றோம் - அது உண்மையில் வாழ்வதல்ல, மெதுவான சாவு! நமது இறுக்கத்தை விட்டு, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ தைரியம் தேவை. பெரும்பாலும் பாதுகாப்பு, பத்திரம், பரிச்சயம், மதிப்பு, மரியாதை போன்றவற்றில் நாம் சிறைப்பிடிக்கப்படுகிறோம். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களுக்காக நாம் எளிதாக பாதிக்கப்படுகிறோம். செம்மறி ஆடு போல கும்பலோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் குறுகிய மனோநிலையை உடைத்து, 'தான்' என்ற அகங்கார குட்டிச்சுவரை தகர்த்து, சௌகரிக வட்டத்தை தாண்டி வெளியே செல்ல தைரியம் தேவை. துயரம் கொண்டு அவலநிலையில் இருப்பது மிக எளிது, எந்த கோழையாலும் அதை செய்ய முடியும். சந்தோசமாக, சுதந்திரமாக பறக்க மிக்க தைரியம் தேவை.

அன்பு, அறிவு என்ற இரண்டு இறக்கைகளை, ஆரோக்கியம், அமைதி, தெளிவு கொண்ட ஆற்றலை தேர்ந்த முறையில் இயக்கி, தைரியத்துடன் இந்த பரந்த உலகில் சுதந்திரமாக, சந்தோசமாக பறக்க முடியும்!

——

CK. காமராஜ்

14 ஜனவரி 2019 (தமிழ்)

26 ஜூன் 2018 (English)