வாழ்க்கை முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. எனவே நாம் பெரும்பாலும் அறியாமையில் தவறான திசையில் செல்கிறோம். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், ஆனாலும் அறியாமல் துன்பத்தைத் தேர்வு செய்கிறோம்.
எவ்வளவு எதிர்க்கிறாயோ, அவ்வளவு வலுபெறும்!
எவ்வளவு மறுக்கிறாயோ, அவ்வளவு நிலைபெறும்!
எவ்வளவு பயந்தோடுகிறாயோ, அவ்வளவு துரத்தும்!
எவ்வளவு துரத்துகிறாயோ, அவ்வளவு தள்ளி போகும்!
எவ்வளவு ஏங்குகிறாயோ, அவ்வளவு அதிருப்தி தரும்!
எவ்வளவு எதிர்பார்க்கிறாயோ, அவ்வளவு ஏமாற்றம் தரும்!
எவ்வளவு குறை சொல்கிறாயோ, அவ்வளவு எரிச்சல் தரும்!
எவ்வளவு பொத்தி பாதுகாக்கிறாயோ, அவ்வளவு இழப்பை தரும்!
சரிசெய்ய போராடும் போது, சேதப்படுத்துகின்றாய்!
கவர்ந்திழுக்க போராடும் போது, கவர்ச்சியற்று போய்கின்றாய்!
தக்க வைக்க போராடும் போது, தள்ளி விடுகின்றாய்!
கட்டுப்படுத்த போராடும் போது, கட்டுப்பாட்டை இழக்கின்றாய்!
நிச்சயத்தை நாடும் போது, நிதர்சனத்தை இழக்கின்றாய்!
பாதுகாப்புச்சுவரை கட்டும் போது, பாதுகாப்பின்மை அடைகின்றாய்!
மாற்றத்தை எதிர்க்கும் போது, வளர்ச்சியைத் தடுக்கின்றாய்!
மரணத்திற்கு அஞ்சும் போது, வாழாமலே வீழ்கின்றாய்!
இன்பத்திற்கு ஆசைப்படும் போது, துன்பம் அடைகின்றாய்!
சுகத்திற்கு அலையும் போது, அடிமைப்படுகின்றாய்!
அழகிற்கு ஏங்கும் போது, நிம்மதி இழக்கின்றாய்!
தற்பெருமை தேடும் போது, விரக்தி அடைகின்றாய்!
மூடநம்பிக்கை வைக்கும் போது, அடிமையாகின்றாய்!
ஆராயாமல் நம்பும் போது, ஏமாளியாகின்றாய்!
எல்லாம் தெரியும் போது, முட்டாளாகின்றாய்!
ஆணவ தீர்ப்பளிக்கும் போது, அவதிப்படுகின்றாய்!
வாழ்க்கை ஒரு கடல் செல்லும் வெள்ளம்...
எதிர்த்து போராடும் போது, தோற்று போய்கின்றாய்!
ஏற்றுக் கொள்ளும் போது, வல்லமை பெறுகின்றாய்!
தெளிவுடன் சரணடையும் போது, சுதந்திரம் அடைகின்றாய்!
தெளிவுடன் பார்த்தால், உண்மையில் எந்த முரண்பாடுகளும் இல்லை. நம் ஈகோவின் பார்வையில், நம் அறியாமையின் காரணமாக, இவை முரண்பாடுகளாக தெரிகின்றன. ஈகோ என்பது நிதர்சனத்திற்கு எதிராக உள்ளதால், நாம் பல தவறான நம்பிக்கைகளை, கருத்துக்களைக் கொண்டுள்ளோம். இதுவே நம் துன்பத்திற்கெல்லாம் மூலகாரணம்.
"இந்த உலகில் அதிகம் அவதிப்படுபவர் பல தவறான கருத்துக்களைக் கொண்டவர், நம்முடைய பெரும்பாலான கருத்துக்கள் தவறானவை" — புத்தர்
நாம் ஒன்றை உணர்வதால் அல்லது அனுபவிப்பதால், அது உண்மை என்று அர்த்தமல்ல. நம் மனதை முட்டாளாக்குவது மிகவும் எளிதானது (உண்மையில், நம்முடைய மன-அனுபவங்களில் பெரும்பாலானவை ஒரு மாயை — அது நமக்கு தோன்றுவது போல் அல்ல). முழுமையாக பார்ப்பதற்கு ஆழ்ந்த தெளிவும் புரிதலும் தேவை.
நம்முடைய உணர்வகளையும் அனுபவங்களையும் அப்படியே உண்மை என்று நம்பாமல் இருப்பது. இது நம் உணர்வுகளையும் அனுபவங்களையும் புறக்கணிப்பதோ, நிராகரிப்பதோ அல்ல. இது நாம் அவற்றை எப்படி எடுத்து கொள்கின்றோம் என்பது பற்றியது; நாம் எப்படி அனுமானங்கள், நம்பிக்கைகள் மற்றும் சொந்த கதைகளை உருவாக்குகிறோம் என்பது பற்றியது.
நம் கருத்துக்கள், பார்வைகள் மற்றும் நம்பிக்கைகள் உண்மைதான என்று தெளிவுடன் ஆராய முனைவது; மேலும் அவை எவ்விடத்தில், எப்படி, ஏன் உதவும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முனைவது. மதுவிலும் சில தற்காலிக நன்மை உண்டு என்பதால், அது நல்ல மருந்தாகிவிடாது. ஒன்று நல்ல மருந்தே ஆனாலும், அது எல்லா இடத்திலும் பொருந்திவிடாது.
நம்முடைய உணர்வுகள், அனுபவங்கள், பார்வைகள், கருத்துகள் மற்றும் நம்பிக்கைகளை பற்றி கொள்ளாமல் இருப்பது. அவற்றைப் பற்றி பிடித்துக்கொள்ளும் போது, அவை சுமை தரும் குப்பை மூட்டைகளாகவும், தீங்கு விளைவிக்கும் விஷங்களாகவும் மாறிவிடுகின்றன. புத்தர் தனது போதனைகளை ஆற்றைக் கடக்கும் நோக்கத்திற்கான ஒரு படகைப் போன்றது என்றும், அவற்றைப் பற்றி பிடித்துக் கொள்ளும் நோக்கத்திற்காக அல்ல என்றும் கூறுகிறார். அக்கறை கடந்த பின்னும், படகை தூக்கிக்கொண்டு அலைவது முட்டாள்தனம்.