புத்தரின் போதனைகளை ஓரளவு சாதாரணமாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதிலுள்ள ஆழமான ஞானத்தை உணர்ந்து கொள்ள தியானம் மற்றும் நல்ல ஆசிரியர் தேவை. உதாரணமாக, நிறங்களை பார்க்க இயலாத ஒருவரிடம் சிகப்பு நிறத்தை பற்றி எவ்வளவு விளக்கினாலும், அவர் அதை எவ்வளவு புரிந்து கொண்டாலும், அது சிகப்பு நிறத்தை பார்த்த அனுபவம் அல்ல. எனவே மேலோட்டமான புரிதலை கொண்டு எந்த தீர்வுக்கும் வராமல், அப்புரிதலை முதல் படியாக வைத்துக்கொண்டு, அதில் எழும் சந்தேகங்களை, கேள்விகளை முறையாக அணுகுவது உகந்தது.
ஆழமான ஞானத்தை வார்த்தைகளினால் முழுமையாக விளக்க முடியாது. வார்த்தைகளை மட்டும் பற்றி கொள்ளாமல், அது காட்டும் உண்மையை உணர்ந்தது கொள்ள முனைய வேண்டும். எனவே புத்தர் சொல்கின்றார்: என் வார்த்தைகள் சந்திரனை சுட்டிக்காட்டும் விரல் போன்றது. விரலை சந்திரன் என்று நினைத்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
பல நேரம், நமக்கு ஏற்கனவே இருக்கும் அறிவு, நாம் ஆழ்ந்த உண்மையை பார்ப்பதற்கு தடையாக உள்ளது. அறியாதவர்கள் அறியாமை இருளில் தொலைந்து போய்கின்றனர்; ஆனால் அறிந்தவர்கள் அதை விட பெரிய அறியாமை இருளில் தொலைந்து போய்கின்றனர். ஆகவே லாவோ-ட்சு சொல்கின்றார்: நீங்கள் ஞானத்தை விரும்பினால், உங்கள் மனதை வெற்றிடமாக்குங்கள். தொடர்ந்து பேசிக்கொண்டே, யோசித்துக்கொண்டே இருப்பதால் அது புரிந்து விடுவதில்லை; ஆனால் முறையான பயிற்சியில் அது பிடிபடும்.
ஆசை பட வேண்டும் என்பதும் ஆசை
ஆசை பட வேண்டாம் என்பதும் ஆசை
ஆசை வேண்டாம் என்பதால் அது ஓடிடுவதில்லை
ஆசையில் அலைபவன் அரை நரகம்
பேராசையில் அலைபவன் முழு நரகம்
ஆசையே இல்லாதவன் வெறும் பிணம்
ஆசையின் அவலத்தை ஆழ்ந்துணர்வது ஞானம்
அது அரையும் குறையுமாக புரிந்தால் குழப்பம்
அது அறியாமையை விட இருண்ட அறியாமை
ஆசையிலிருந்து விடுதலை பெறுவது பேரானந்தம்
விடுதலை பெறாதவன் ஆசையில் ஆடும் அடிமை
அடிமையாக இருக்கும் வரை எதுவும் அவலமே
ஆசையே, பற்றே நம் துக்கத்திற்கு மூலக் காரணம் என்கிறார் புத்தர். இதன் முழுமையான "சந்திரன்" என்ன?