சமரசம் (காம்ரமைஸ்) தாண்டி

கல்யாணத்தில் சமரசம்

குடும்ப வாழ்க்கையில் சமரசம்

தொழில் முறையில் சமரசம்


கணவன் மனைவிக்கு இடையே சமரசம்

பெற்றோர் குழந்தைகளுக்கு இடையே சமரசம்

முதலாளி தொழிலாளிக்கு இடையே சமரசம்


சொந்த பந்தத்தோடு சமரசம்

அக்கம் பக்கத்தோடு சமரசம்

அண்டை நாட்டோடு சமரசம்


இவையெல்லாம் —

பற்றுக்கும் சுதந்திரத்துக்கும் இடையான சமரசம்

ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையான சமரசம்

ஆணவத்திற்கும் இயலாமைக்கும் இடையான சமரசம்

சுகத்திற்கும் துயரத்திற்கும் இடையான சமரசம்


வாழ்வு ஒரு சமரசம் —

வாழ்விற்கும் சாவிற்கும் இடையான சமரசம்

பரிணாம போராடத்திற்கு இடையான சமரசம்


வாழ்வு ஒரு சமரசம், வாழ்க்கை அல்ல!

தெளிவான புரிதல் காண,

சமரசம் தாண்டிய இணக்கம் வளரும்

ஆணவம் அழித்து மனம் திறக்க,

சமரசம் தாண்டிய சமாதானம் வளரும்

அங்கு அன்பும், மகிழ்ச்சியும் செழிக்கும்!

சமரசம் (Compromise) என்பது முழுமையாக பிடிக்காவிட்டாலும், அரைமனதோடு வேறுவழி இன்றி செய்வது. இணக்கம் (Harmony) என்பது தெளிவாக புரிந்து கொண்டு முழுமனதோடு செய்வது. எனவே, நாம் என்ன செய்கிறோம் என்பதை விட, அதை நாம் எப்படி செய்கின்றோம்... எப்படிப்பட்ட மனநிலையில் செய்கின்றோம் என்பதை பொறுத்தது. எதையும் முழுமனதோடு செய்யாத போது, அங்கு துயரம் அதிகரிப்பதோடு, செய்யும் காரியத்தின் தரமும், பண்பும் குறைந்து போகின்றது.

சண்டை போட்டு போராடிக்கொண்டு இருப்பதை விட சமரசம் காணுவது உகந்தது என்றாலும், வாழ்க்கையே வெறும் காம்ரமைஸ் என்றாவது பரிதாபமான சோகம். சுகமான, சௌகரியமான சிறை வாழ்வை விட, சுகமற்ற, சௌகரியமற்ற சுதந்திர வாழ்வே மேல் — என்ற மனதிடம் வேண்டும். அடுத்தவர்களிடம் சில நேரம் சமரசம் காணுவது உகந்தது என்றாலும், தனிப்பட்ட நம் வாழ்க்கையில் இணக்கம் வளர்ப்பதே, நம் அமைதிக்கு, ஆரோக்கியத்திற்கு, மகிழ்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

உதாரணமாக: பெரும்பாலானோர் அவர்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலும், காம்ரமைஸ் பண்ணி, அதை சலித்துக் கொண்டே செய்கின்றனர். அதனால் வேலை பளு, மனஉளச்சல் அதிகமாகுமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை. முதலில், எந்த அவசியமும் இன்றி பிடிக்காத வேலை செய்யாமல், அதை விட்டுவிட்டு பிடித்ததை செய்யும் துணிவு வேண்டும். பிறகு, நம் சூழ்நிலைக்கு ஏற்றது அதுதான் என்றால், அதை தெளிவாக புரிந்து கொண்டு அதை நன்றியுடன் முழுமனதுடன் செய்ய வேண்டும். எதை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், அதை முழுமையாக புரிந்து கொண்டு முழுமனதுடன் செய்வது இணக்கம்.

——

CK. காமராஜ்

21 டிசம்பர் 2020

31 December 2020 (Beyond Compromise)