இரண்டும் ஓன்றே

உண்மையிலேயே உனக்கு நீ உதவும்போது, ​​மற்றவர்களுக்கு உதவுகின்றாய்.உண்மையிலேயே மற்றவர்களுக்கு நீ உதவும்போது, ​​உனக்கு உதவுகின்றாய்.

அன்புக்கான ஞானத்தில் முரண்பாடாக தோன்றும் ஒரு நுண்ணறிவு உண்டு: நாம் நம்மை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும்போது, ​​மற்றவர்களுக்கு உதவுகின்றோம்; நாம் மற்றவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும்போது, ​​நமக்கு உதவுகின்றோம். இது இந்த கொரோனா உலகில், நமக்கு ஓரளவு பிடிபடக்கூடும். ஆனால் இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் உண்மை. இது உண்மையான அன்பிற்கு ஒரு நல்ல அடையாளம். பல நேரம் இது நமக்கு தெளிவாக தெரிவதில்லை என்றாலும், ஒன்று நமக்கோ அல்லது அடுத்தவருக்கோ தீங்கானது என்றால், அது இருவருக்கும் தீங்கு விழைவிப்பதாகவே இருக்கும். சுயநலமாக இருப்பதும் அல்லது நம்மையே தியாகம் செய்வதும், நமக்கோ அடுத்தவருக்கோ நிலைத்த நன்மை தருவதில்லை.

இது ஏனென்றால், நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு உண்மையான, நன்கு வரையறுக்கப்பட்ட எல்லை இல்லை. நம் வாழ்கை மற்றவர்களுடனும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துடனும் மிக ஆழமாக ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளது. ஆனால் நம் ஈகோ செயற்கையாக நம்மைச் சுற்றி ஒரு திடமான எல்லையை உருவாக்குகிறது, இது நிதர்சனத்திற்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு வழிவகுக்கிறது, எனவே நாம் வாழ்நாள் முழுவதும் போராடுகின்றோம், அவதிப்படுகின்றோம்.

இதற்கு இன்னொரு எளிய காரணமும் உள்ளது: நம்மிடம் இருப்பது ஒரே ஒரு மூளை/மனம் மட்டுமே, அது நம் நல்வாழ்வை, நம் ஆசாபாசங்களை, நம் எண்ணங்களை, உணர்சிகளை தீர்மானிக்கின்றது. இது வெளிப்படையானது என்றாலும், அதை நாம் ஒழுங்காக கண்டுகொள்வதில்லை. நம்மிடம் நமக்காக ஒரு மூளை, அடுத்தவர்களுக்காக மற்றொரு மூளை இல்லை. நாம் ஒருவரை வெறுக்கும்போது, ​​நமக்கு நாமே விஷம் கொடுத்துக் கொள்கின்றோம். ஒருவருக்கு எதிராக நம் இதயத்தை கடினப்படுத்தும்போது, ​​நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கின்றோம். நம்மிடம் இருப்பது ஒரே ஒரு அன்பு, ஒரே ஒரு நேசம். அதை உண்மையாக வளர்க்கும் போது, நம் தன்மை அன்பாக, நேசமாக மாறிவிடுகின்றது.

நம்முடைய தவறான புரிதல் மற்றும் அறியாமை காரணமாக, நாம் நம்மையும் மற்றவர்களையும் வெறுக்கிறோம், காயப்படுத்துகிறோம். நாம் துன்பப் படும்போது, அது வெளியே கசிந்து, மற்றவர்களை காயப்படுத்துகிறது — பெரும்பாலும் அவர்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஆகவே சுய அன்பை வளர்த்துக்கொள்வதும், நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் திறனுடன் கையாள கற்றுக்கொள்வதும் மிக அவசியம். எனவே தியானம் என்பது நம் அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு!

நல்லவர்களிடம் நல்லவர்களாக இருங்கள்

கெட்டவர்களிடமும் நல்லவர்களாக இருங்கள்

அதுவே உண்மையான நற்குணம் —

ஏனென்றால் உங்களது தன்மை நற்குணமானது


அன்பானவர்களிடம் அன்பு காட்டுங்கள்

வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டுங்கள்

அதுவே உண்மையான அன்பு —

ஏனென்றால் உங்களது தன்மை அன்பானது


விசுவாசமுள்ளவர்களிடம் விசுவாசம் கொள்ளுங்கள்

விசுவாசமற்றவர்களிடமும் விசுவாசம் கொள்ளுங்கள்

அதுவே உண்மையான விசுவாசம் —

ஏனென்றால் உங்களது தன்மை விசுவாசமானது


— டாவோ டெ சிங்

——

CK. காமராஜ்

07 மே 2020 (தமிழ்)

06 மே 2020 (English)