வாழ்க்கை கணக்கு


துயரத்தை கண்டு மனம் சுருங்கும் நாம்,

அதன் காரணங்களை நேசிப்பது ஏனோ?

என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்!

நம் துயரங்கள் யாவும் நம் உருவாக்கம்!

பிறரை குறை கூறி பயன் ஏதும் உண்டோ?

முழு பொறுப்பு ஏற்காத வரை,

வளர்ச்சிக்கு வழி ஏதும் இல்லை!

குறை கூறிப் புலம்பும் வரை,

பரிதாபமாக தவிக்கும் பலிகடா, நாம்!


* * *


பிணி, மூப்பு, மரணம் நோக்கும்

நிலையற்ற சிறு வாழ்க்கைக்குள்

பேராசை, ஆணவம் வளர்த்து

பணம், புகழ், அதிகாரம் தேடி

சுயநல பித்தலாட்டம் போட்டு

போட்டி, பொறாமை கொண்டு

ஆத்திரம், சண்டை, சச்சரவு இட்டு

கவலை, பதட்டம், இறுக்கம் வளர்த்து

மதிகெட்டு காய்ந்து கருகி போகும்

மனிதன் போடும் தப்பு கணக்கு!


* * *


கடும் தவமாய் தவம் இருந்து

விழித்து கொண்ட புத்தனெல்லாம்

கருணையோடு போதித்த கணக்கு:


நல்லவற்றை கூட்டி, தீயவற்றை கழித்து

அறிவைப் பெருக்கி, நல்வழியை வகுத்து

வெற்றி, தோல்வியை சமமாக கொள்வாய்!


அன்பை வளர்த்து, ஆணவத்தை அழித்து

நல்-அணுகுமுறையுடன் நட்புறவு கண்டு

இன்ப, துன்பத்தை ஒன்றாய் ஏற்பாய்!

——

CK. காமராஜ்

11 மார்ச் 2021