நிலைமையும் மகிழ்ச்சியும்

||நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்.||

>> அப்படியே அது உண்மை என்றாலும், அந்த மகிழ்ச்சி நம் நிலைமையை, சூழ்நிலையை சார்ந்த ஒன்றாக இருக்கும். நிலைமை என்பது நிரந்தரமற்ற, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. எனவே அது தற்காலிக மகிழ்ச்சியாகவே இருக்கும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நாம் நாடும் போது, நம் வாழ்கை ஒரு தொடர்ந்த போராட்டமாகவே இருக்கும். வாழ்கை ஒரு போராட்டமாக இருந்தால், நம் மனம் தெளிவின்றி தவறான முடிவுகளையே எடுக்கும். அது நம் மகிழ்ச்சியை மேலும் சீர்குலைக்கும்.

||மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறிவிடும் என்பதே உண்மை.||

>> அப்படியே அது பொய் என்றாலும், அப்படியே நிலைமை மாறாமல் போனாலும், துயரத்தில் வாடுவதால் எந்த பயனும் இல்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தால், நம் மனம் தெளிவுடன் தேர்ந்த முறையில் வேலை செய்து, மகிழ்ச்சிக்கு மேலும் வழிவகுக்கும். உண்மையான மகிழ்ச்சி நம் நிலைமையை சார்ந்ததல்ல, அது நம் மனநிலையை சார்ந்தது. மகிழ்ச்சியாக இருப்பது என்பது ஒரு பழக்கம், அது ஒரு பயிற்சி!

நிலைமை என்பது பல்வேறு காரண-நிலைகளினால் (causes and conditions) மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. அதனுடன் போராடும் போது, நாம் தோற்றுப் போகின்றோம். நம் கையில் இல்லாத நிலைமையை மாற்ற போராடுவது முட்டாள் தனம். நம் கையில் இருக்கும் மனநிலையை முறையாக வைக்க பயிற்சிக் கொள்வது அறிவார்ந்த செயல். அது நம் நிலைமையின் காரண-நிலை-காரியங்களையும் (causes, conditions and effects) தெளிவுடன் புரிந்து கொள்ள உதவும். அதிலிருந்தே நம் தேர்ந்த செயல்கள் வெளிப்படும்.

——

CK. காமராஜ்

29 நவம்பர் 2020

27 December 2020 (Happiness Is A Habit)