ஆணவத்தின் மரணம் சரணம்

வாழ்க்கையில் எல்லாவற்றிக்கும் ஒரு விலை உண்டு. நாம் எதை தேர்ந்தெடுத்தாலும், எதை நம்பினாலும் அதற்கான விலையை நாம் செலுத்தி தான் ஆக வேண்டும். அதன் விளைவுகளை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். நாம் விலை கொடுத்து வாங்குவது மதிப்பு உள்ளதாக பார்த்து கொள்வதும், அதை முறையாக பயன்படுத்தி கொள்வதும் நம் அறிவு. பலர் இங்கே, மருந்துச் சீட்டை படித்து கொண்டு, அதை நம்பி கொண்டு, பாடிக்கொண்டு இருந்தாலே குணமாகிவிடலாம் என்று இருக்கின்றனர். ஒரு நம்பிக்கையின் மீது பற்று கொள்ளும் போது, அது கண்களை மறைத்து, அறிவை மழுங்க அடித்து விடுகிறது. அதனால் அது அறிவுக்கு தெரிவதில்லை.


சுவற்றில் முட்டி கொண்டால் வலிக்கும். தெரியாமல் முட்டி கொண்டாலும் வலிக்கும், தெரிந்தே முட்டி கொண்டாலும் வலிக்கும். நல்லவனாக இருந்து முட்டி கொண்டாலும் வலிக்கும், கெட்டவனாக இருந்து முட்டி கொண்டாலும் வலிக்கும். ஆண்டவனை வேண்டிக் கொண்டு முட்டி கொண்டாலும் வலிக்கும், வேண்டாமல் முட்டி கொண்டாலும் வலிக்கும். சுவற்றில் முட்டி கொண்டு, சிலர் படும் வேதனை: நான் என்ன பாவம் செய்தேன், ஆண்டவன் இப்படி சோதிக்கிறான்; மற்றும் சிலரின் கதறல்: உன்னை நம்பினேனே ஆண்டவா, இப்படி கை விட்டுட்டியே. மற்றும் சிலரின் விடாநம்பிக்கை: தீட்டு கழிச்சிட்டா எல்லாம் சரியாகி விடும். பலரின் குழப்பம்: அவன் சரியில்லை, இவன் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று ஒரே குறை; ஆனால் எதாவது நல்லது நடந்திட்டால் மட்டும், அது ஆண்டவன் கருணை. இதையெல்லாம் தாண்டி, சிலர் சோக பாட்டில், மற்றும் சிலர் மது பாட்டில்.


வாழ்க்கையின் உண்மைகளுக்கு மருந்தே இல்லை. அதை எதிர்த்து முட்டி கொண்டால் வலிக்கவே செய்யும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் போது, பல பற்றுகளை கைவிட வேண்டும். அதற்கு பயம், எதிர்ப்பு, குழப்பம், போராட்டம். வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ள படியே ஏற்று கொள்வது என்பது ஆணவத்தை துறந்து சரணடைவது. அதற்கு நல்ல மனதிடமும், ஆழ்ந்த அறிவும் தேவை, அதற்கு பயிற்சி தேவை. ஆனாலும் ஒரு குறுக்கு வழி உண்டு: ஆணவத்தை துறந்து ஆண்டவனிடம் சரணடைவது. கடவுள் நம்பிக்கையின் உண்மையான மதிப்பு இதுவே. ஆனால் இதை யாரும் பயன்படுத்த காணோம். நம்பிக்கை பற்றாகி, அது மதமாகி, மற்றவற்றிடம் சண்டையிட்டு கொண்டுள்ளது. குறுக்கு வழி குறுக்கு புத்தி ஆன கதை. ஒவ்வொரு சண்டையும், கோபமும், சோகமும், கதறலும் ஆண்டவனின் படைப்பை கேலி செய்யும் கூத்து.

ஆடிய ஆட்டமெல்லாம் போதும் என்று, முதிய காலத்திலாவது சரணடையலாம். போராடிய போராட்டமெல்லாம் போதும் என்று, கடைசி காலத்தையாவது நிம்மதியாக வாழலாம். ஆனால், ஆடிய ஆட்டமெல்லாம் இன்னும் அடங்க மறுக்கும் அவலம். போராடிய போராட்டமெல்லாம் கடந்த கால சோகமாக, எதிர் கால பயமாக, நிகழ் கால பாரமாக தொடரும் அவலம். பாரத்தையெல்லாம் இறக்கி வைத்து விட்டு முதலில் நிம்மதி காண பழக வேண்டும். நிம்மதியற்ற மனம் குழம்பிய மனம்; அதிலிருந்து குழப்பமே வெளிப்படும். நிம்மதியற்ற மனநிலையில் எதையும் சிந்திப்பது, முடிவெடுப்பது, செய்வது மடமை. நிம்மதி காணும் போது, மனம் தெளிவு பெரும், செய்யும் காரியம் விளங்கும். நம் அவலமும் நிம்மதியும், நம் கையில் மட்டுமே என்பது நம் சுரணையில் தெளிவாக எட்டும் போது, அது நமக்குள்ளே அன்பு, அமைதி, இணக்கம் காண வழி வகுக்கும். அன்பும், சமாதானமும் முதலில் நமக்குள்ளே வேண்டும். அங்கிருந்து வெளிப்படும் அன்பே மற்றவர்களுக்கு உதவும்.

——

CK. காமராஜ்

05 ஏப்ரல் 2022