ஆத்திரம் எனும் அரக்கன்

நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாக உள்ளோம்.அவை நம்மை இயக்கி ஆட்டிப்படைக்கின்றன.அவற்றிலிருந்து விடுதலை பெறுவது நம் அதிமுக்கிய வேலை.

நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாக உள்ளோம். அவை நம்மை இயக்கி ஆட்டிப்படைக்கின்றன. ஆத்திரம் எனும் அரக்கன் மதுவை விட மிக மோசமானவன்; இவனுடைய போதை மதுவை விட கோரமானது — இது அதி வேகமாக தலைக்கு ஏறும் பித்துபிடித்தநிலை. மதுவை அருந்திவிட்டு அமைதியாக, கலகலப்பாக இருப்போரும் உண்டு. ஆனால் ஆத்திரம் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் எரித்து அழிக்கும் நெருப்பு. ஆத்திரத்தையும் வெறுப்பையும் கொண்டே நாம் நமக்கும், மற்றவருக்கும் நரகத்தை உண்டாக்குகின்றோம்.

ஆத்திரம் இருக்கும் இடத்தில் அறியாமையும், குழப்பமும் மேலோங்கி இருக்கும். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு1. ஒருவன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த நற்பண்புகள், செய்த நற்காரியங்கள் ஒரு ஆத்திரத்தால் அடிப்பட்டு போவதுண்டு. ஆத்திரகாரனின் வெறிநிலையை கண்டு மற்றவர்கள் அஞ்சுவது, அவன் ஆணவத்தை மேலும் வளர்க்கும். அதில் தன் சுய-மரியாதையும் அழிவதை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை. (ஆத்திரகாரனின் ஆணவமும், அதிகாரமும் அவனை விட எளியவர்களிடத்தில் இருக்கும்; வலியவர்களிடம் வாலை சுருட்டி கொண்டு இருப்பான் அல்லது மறைமுக தாக்குதலை நாடுவான்.)

ஆத்திரகாரனுக்கு துன்பத்திற்கான காரணங்கள் எல்லா இடங்களிலும் இருக்கும். அதன் அடிமைத்தனம் வளர வளர, அவன் மேலும் எளிதாக தூண்டப்படுவான். பலதரப்பட்ட சூழ்நிலைகள் அவனுக்கு எளிதாக எரிச்சலை தரும். ஆனால், தன் ஆத்திரத்திற்கும் துயரத்திற்கும் அடுத்தவர்களை குறைகூறி, தன் ஆத்திரத்தை நியாப்படுத்துவான். அவன் படும் துயரம், அவன் அடுத்தவர்களுக்கு ஏற்படுத்தும் துயரை ஒழுங்காக புரிந்து கொள்ள முடியாமல் அவன் கண்களை மறைக்கும்.

ஆத்திரம் என்பது ஒரு நரக அவலம். அதை நியாப்படுத்துவது கேவலமான அசிங்கம்2. அதை சாதாரணமாக விசயமாக எடுத்துக்கொண்டு, அடுத்தவர்களை புண்படுத்துவதை புரிந்து கொள்ளாமல் இருப்பது கொடிய சுயநலம்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு — குறள்

ஆத்திரம் எனும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட, முதலில் இந்த அரக்கனை தெளிவாக கண்டுகொள்ள வேண்டும்; எந்தவிதத்திலும் அவனை நியாப்படுத்த கூடாது. நம் ஆத்திரத்திற்கு நாம் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அடுத்தவர்களை குறைகூறும் போது, அதிலிருந்து விடுபட எந்த வழியும் இல்லை.

ஆத்திரம் அகங்காரத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், அதன் ஆழத்தில் இயலாமையும், பயமும் இருக்கும்3. அதில் பொத்தி வைத்த ஆசைகளும், தேக்கி வைத்த எதிர்ப்பார்ப்புகளும், அடக்கி வைத்த வெறுப்புகளும், மறைத்து வைத்த மொள்ளமாரித்தனங்களும் இருக்கும். அதை தெளிவாக புரிந்து கொண்டு, முறையாக கையாளாதவரை ஆத்திரத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாது. (இங்கு யாரும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றி வைக்கவோ, எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவோ, மொள்ளமாரித்தனங்களுக்கு ஒத்து போகவோ பிறக்க வில்லை, வாழவில்லை; அது நம்மை பெற்று போட்டவராக இருந்தாலும் சரி அல்லது நாம் பெற்று போட்டவராக இருந்தாலும் சரி. இதை நன்றாக மனதில் வைப்பது எல்லோருக்கும் நலம்.)

ஆத்திரம் என்பது சட்டென்று தூண்டப்பட்டு உருவாகும் தற்காலிக வெறிநிலை உணர்ச்சி. அதன் ஆற்றல் மிக அதிகம்; அதை அடக்குவது மிகக்கடினம். ஆகவே பெரும்பாலானோர் அதன் பிடியில் விழுந்து அதை வெளிப்படுத்தி விடுகின்றனர். அதை நாம் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும் போதும், அதன் அடிமைத்தனம் மேலும் அதிகரித்து, ஆத்திரம் மேலும் மேலும் எளிதாக வெளிப்படும். அதே நேரம் ஆத்திரத்தை அடக்கிவைப்பதும் நல்லதல்ல, அது உள்ளே புற்றாக வளரும்.

ஆத்திரத்தை அடக்கியும் வைக்காமல், வெளிப்படுத்தவும் செய்யாமல், முறையாக நடுநிலையில் இருந்து அதை தெளிவாக அறிந்து கொள்ள முனைய வேண்டும்.

அப்படிப்பட்ட தெளிவிற்கு முதலில் அமைதி காக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக இந்த அரக்கனின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

பொறுமை எனும் அருமருந்து

கோபம் என்பது உணர்ச்சி. அது ஆத்திரமாக முறையற்று வெளிப்படுகின்றது. அதற்கு அடிமையாக இருப்பதே தெரியாமல், பெரும்பாலும் மனிதன் அதை மேலும் மேலும் தண்ணி ஊற்றி வளர்க்கின்றான். அதற்கு அடிமையாக இருக்கும் வரை, அதை முறையாக வெளிப்படுத்தவோ, பயன்படுத்தவோ முடியாது.

பொறுமை என்பது உணர்ச்சிவசப்படாமல், அதன் பித்துநிலையை தணித்து, அறிவுடன் உணர்ந்து செயல்பட உதவும் பயிற்சி.

பொறுத்தார் பூமி ஆள்வார் — பழமொழி

ஆத்திரத்தை தெளிவாக அறிதல்

சற்றே கடுப்பாக கத்துவது முதல் வெறி கொண்ட முறையில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது அல்லது பொருட்களை தூக்கி எறிவது என ஆத்திரத்தில் பலவகை உண்டு. உணர்ச்சி வசப்பட்டு கத்தி விட்டு வருத்தபடுவோர் உண்டு, மன்னிப்பு கேட்போர் உண்டு; அதை நியாப்படுத்திக் கொண்டே இருப்போர் உண்டு. சிலருக்கு ஆத்திரம் சில நேரம் வரும். மற்றும் சிலருக்கு ஆத்திரம் அவரது வாழ்க்கையில், அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக ஆகிவிடுவதுண்டு.

சின்ன சின்ன காரணங்களுக்காக வரும் கோபம், மனதில் உள்ளதை நேரடியாக வெளிப்படுத்த முடியாதபோது வரும் கோபம், ஆழ்மனதில் உள்ள நச்சுத்தன்மை பல்வேறு மொள்ளமாரித்தனங்களாக வெளிப்படும் கோபம் என ஆத்திரத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. நம் முகமூடிகளை கழற்றி, நம்மில் உள்ள அசிங்கங்களை கண்டறிந்து களைந்தெறிய நிறைய தைரியம் வேண்டும்.

நம் ஆத்திரத்தை ஒருவர் சுட்டி காட்டினால், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்? சற்றே நிதானத்துடன் அறிந்து கொள்ள முயற்சிப்போமா? அல்லது உடனடியாக எதிர்த்து, நம்மை நியாப்படுத்துவோமா? ஒரு கண்ணாடி போல் நமக்கு பிரதிபலித்து காட்டும், சுட்டி காட்டியவருக்கு நாம் நன்றி சொல்வோமா? அல்லது 'நீ என்ன பெரிய அறிவாளியா?' போன்ற எதிர் கேள்விகள் கொண்டு சுட்டி காட்டியவரை மட்டம் தட்டுவோமா? மனிதனுடைய ஈகோவின் நடத்தைகளைத் தான் எவ்வளவு எளிதாக கணிக்க முடிகின்றது! தத்துவம் பேசி, ஊருக்கே அறிவுரை சொல்லும் மனிதன், இந்த உலகையே மாற்ற நினைக்கும் மனிதன், தன் நிலையிலிருந்து மட்டும் ஒரு அடி மாற எவ்வளவு வீராப்பு, எவ்வளவு போராட்டம்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு — குறள்

சில எளிய பயிற்சி முறைகள்

  • முதலில் ஆத்திரத்தை எந்தவிதத்திலும் நியாப்படுத்தாமல், அடுத்தவர்களை குறைகூறாமல், அதற்கான முழுப்பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • ஒவ்வொருவருக்கும் ஆத்திரத்தை தூண்டும் காரணிகள் (Hot Buttons) உண்டு. அதை தெளிவாக அறிந்து கொள்வது நன்று. ஆத்திரம் நம்மில் தூண்டப்படும் போது, அது தலைக்கு ஏறும் முன்னே தடுத்து நிறுத்தினால் அதன் பிடியில் சிக்காமல் நம்மை பாதுக்காக்க இயலும்.

  • ஆத்திரம் என்பது மடத்தனமான வெறிநிலை என்பதால், அது தணியும் வரை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். எந்த செயலும் கூடாது; எந்த வார்த்தைகளும் கூடாது; எந்த முடிகளும், தீர்மானங்களும் கூடாது. ஆத்திரம் என்பது நம் வீடு பற்றி எறிவது போன்றது; முதலில் அதை அணைக்க முயலவேண்டும்; யார் அதற்கு காரணம் என்பதை அறிய முயல்வதோ அல்லது மேலும் அதில் எண்ணெயை கூற்றுவதோ அறிவார்ந்த செயல் அல்ல.

  • ஆத்திரத்தை தணிக்க மெதுவாக, ஆழ்ந்த மூச்சு விடுவது ஒரு நல்ல பயிற்சி4. இதை மூன்று அல்லது பத்து முறை செய்யலாம்.

  • அப்போதும் ஆத்திரம் தணிய வில்லை என்றால், அவ்விடத்தை விட்டு அகல்வது நல்லது. சிறிய நடைபயணம் பயன்தரும்.

  • அமைதியாக நடுநிலையில் இருந்து நம் ஆத்திரத்தின் மூலக்காரணங்களையும், பண்புகளையும், விளைவுகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முனைய வேண்டும். நம்முடைய சொந்த புரிதலும் ஞானமும் மட்டுமே நமக்கு அதிலிருந்து முழுமையான விடுதலை தரும்5.

நமக்கும் அடுத்தவர்களுக்கும் சொர்க்கத்தை கொடுக்காமல் போனாலும், குறைந்த பட்சம் நரகத்தை கொடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

குறிப்புகள்

  1. இவை அனைத்தும் "ஆத்திரகாரிக்கும்" பொருந்தும். ஆத்திரத்தை நேரடியாக வெளியே காட்ட முடியாத போது, அது பலவகைகளில் மறைமுகமாக, இன்னும் கோரமாக வெளிப்படுவதுண்டு.

  2. அப்படியே கோபம் நியாயமானது என நினைத்ததாலும், அதை அலங்கோலமாக முறையின்றி வெளிப்படுத்துவதில் ஆணவத்தையும் அடிமைத்தனத்தையும் வளர்ப்பதை தவிர வேறு என்ன பயன்? பச்சையாக கெட்ட வார்த்தைகளில் திட்டுவதோ, கிடைத்த பொருட்களை காட்டுமிராண்டித்தனமாக தூக்கி எறிவதோ, கண்ணகி போல் ஊரையே எரிப்பதோ, பேருந்துகளை கொளுத்துவதோ அறிவார்ந்த செயலா? கோபம் கண்ணை மறைக்கும்; அப்படிப்பட்ட கோபத்தை நியாயப்படுத்தும் வரை அதிலிருந்து விடுதலை பெற எந்த வழியும் இல்லை.

  3. ஆத்திரத்திற்கு பின்னால் இயலாமையும், பயமும் இருப்பதால், வயதாக வயதாக கோபமும் எரிச்சலும் அதை சார்ந்த துயரமும் மிக எளிதாக வெளிப்படும். வயதாகும் போது நம் மூளையின் கட்டுப்பாடும் குறைந்து போவதால், வெளிப்படும் கோபமும் எரிச்சலும் பன்மடங்கு உயரும். ஆத்திரத்தை இப்போதே திறனுடன் கையாள கற்கவில்லை என்றால், அது நமக்கும் மற்றவருக்கும் நீடித்த துயரம் தரும்.

  4. கோபமாக இருக்கும் போது, முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா? அனைத்து நரம்புகளும் புடைத்து எந்த நொடியிலும் வெடிக்க காத்திருக்கும் முகம் அது! கண்ணாடியில் பார்த்தபடியே மெதுவாக, ஆழ்ந்த மூச்சு விட்டு, புன்னகை செய்வது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.

  5. நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாக உள்ளோம். அவை நம்மை இயக்கி ஆட்டிப்படைக்கின்றன. அமைதியாக நடுநிலையில் இருந்து நம் உணர்ச்சிகளை முழுமையாக அறிந்து அதன் பிடியிலிருந்து விடுதலை பெறுவதே தியானத்தின் நோக்கம்.