வாழ்வின் சிதறம்

பல வகையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Relativity) வினோதமானது. ஆனால் குவாண்டம் விசையியல் (Quantum Mechanics) மிகவும் வினோதமானது, அதை அவரால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரும் நீல்ஸ் போஹ்ர் என்ற மற்றோரு விஞ்ஞானியும் நடத்திய அறிவுசார்ந்த போர் இருபது ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் வரை நீடித்தது. இறுதியில், குவாண்டம் விசையியல் இன்னமும் முழுமையாக புடிபடவில்லை என்றாலும், அது மீண்டும், மீண்டும், மீண்டும் துல்லியமாக சரியென்று நிரூபிக்கப்பட்டது. குவாண்டம் விசையியலில் வேலை செய்யும் நபர்களிடையே உள்ள ஒரு சுலோகம்: "வாயை மூடிகொண்டு கணக்கிடு".

ஜான் பெல் என்ற விஞ்ஞானி இப்படி கூறுகிறார்:

"போஹ்ரின் கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாக, தெளிவற்று, தெரிந்தே மழுப்பியும் இருந்தது, ஆனால் சரியானது"

"ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் இணக்கமாக, தெளிவாக, எளிதாக இருந்தது, ஆனால் தவறானது"

நாம் நம் வாழ்க்கையையும், நாம் வாழும் உலகத்தையும் புரிந்துகொண்டு அர்த்தம் காண விரும்புகின்றோம். ஆனால் 'அர்த்தம்' என்பது என்ன? அது அடிப்படையில் நாம் பத்திரமாக, நிம்மதியாக உணர்வதற்கான நம் எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பு. வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதாகவும், அது அடிப்படையில் பொருளற்றது என்றும் உணர நேர்ந்தால், அது நம்மை பயமுறுத்துகிறது. மேலும் வாழ்க்கையில் உள்ள நிச்சயமற்ற, தெரியாத, தெளிவற்ற, முரண்பாடுகள் கொண்ட விசயங்களை எதிர்த்து போராடுகின்றோம். அதனால் பலவகையான நிம்மதி தரும், ஆறுதல் தரும், நம்பிக்கை தரும் கற்பனைகளையும், யோசனைகளையும் உருவாக்குகின்றோம். நாம் உண்மையை மறைக்க எவ்வளவு தான் முயன்றாலும், அதை பார்க்காமல் தப்பித்து விலகி ஓடினாலும், அது எப்போதும் நம்மை பின்தொடர்ந்து நம் கதவைத் தட்டி, தான் இருப்பதை நமக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது. கற்பனைகள் சுகமாக இருந்தாலும், முடிவில் உண்மையே வெல்கிறது.

வெப்பவியக்கவியலின் இரண்டாவது விதியின் சிதறம் (Entropy) என்பது ஒழுங்கின்மையை அல்லது சீர்குலைவை குறிக்கிறது. அதன்படி தற்காலிகமாக ஒரு சில ஒழுங்கமைப்புகள் உருவானாலும், ஒட்டுமொத்தத்தில் ஒழுங்கின்மை (சிதறம்) எப்போதும் அதிகரிக்கும். விண்மீன் மண்டலங்கள், சூரிய மண்டலம், உயிர்கள் போன்ற இயற்கையில் உருவான ஒழுங்கமைப்புகளாக இருந்தாலும், அல்லது வீடு, கார், குளிர்சாதன பெட்டி போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்புகளாக இருந்தாலும், அவை அனைத்தும் தற்காலிகமானவை; அவை தொடர்ந்து சீர்குலைவை நோக்கியே செல்லும்.

ஒழுங்கின்மை (சிதறம்) ஏன் எப்போதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதை ஆஸ்திரிய இயற்பியலாளரான லுட்விக் போல்ட்ஸ்மான் என்பவர் நிகழ்தகவு கொண்டு விளக்கினார். ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதற்கு மிகக்குறைந்த நிகழ்தகவே, அது அப்படி இல்லாமல் இருக்க பலமடங்கு அதிக நிகழ்தகவு. எனவே அது காலம் செல்லச் செல்ல சீர்குலைந்து போகும். அவரின் விளக்கம், அவர் வாழ்நாளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மனச்சோர்வு சுபாவமுள்ள அவர், தூக்கில் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அவருடைய விளக்கம் அவருடைய மரணத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கவுதம புத்தர் இதையே வேறொரு வடிவில் சொன்னார்: அனைத்தும் தற்காலிகமானது, நிலையற்றது, முடிவில் சீர்குலைந்து போகக் கூடியது. அவருடைய அனைத்து ஞானங்களும் அடிப்படையில் நிலையாமையைச் சார்ந்தது.

நம் வாழ்க்கையில், நம் உறவுகளில் நம்முடைய நிபந்தனைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான நிகழ்தகவு குறைந்து கொண்டே போகிறது. எனவே அவை நமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், துயரத்தையுமே தருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் ஒரு அடி நம் கல்லறையை நோக்கி நகருகின்றோம் — இறுதியில் இந்த உடல் வயதாகி மடிகிறது. அடிப்படையில் வாழ்க்கைக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, எந்த பிடிமானமும் இல்லை. ஆனால் நாம் நீடித்த நிலைத்த பாதுகாப்பிற்கும், ஏதாவது ஒரு பிடிமானத்திற்கும் ஏங்கித் தவிக்கின்றோம். இதுதான் நம் துன்பத்திற்கு காரணம். நாம் வாழ்வின் நிதர்சனத்திற்கு, உண்மைக்கு எதிராக போராடுகிறோம். சுவரில் முட்டி கொண்டு வலிக்கிறது என்று புலம்பி என்ன பயன்! (நல்லவரா, கெட்டவரா... தெரிந்து முட்டிக்கொண்டாயா அல்லது தெரியாமல் முட்டிக்கொண்டாயா... என்பதெல்லாம் சம்பந்தமற்றது)

முட்டிக்கொண்டு போராடுவதற்குப் பதிலாக, வாழ்வின் நிலையாமையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வாழ கற்றுக்கொள்ள முடியுமா? வாழ்க்கையில் உள்ள மேடு பள்ளங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் அல்லது ராட்டினம் போன்றது; அதற்கு பயந்து போராடுவதற்குப் பதிலாக, சற்றே ஆசுவாசப்படுத்தி, நிம்மதியாக உட்கார்ந்து, அதில் சந்தோசமாக சவாரி செய்ய முடியுமா?

"ஒரு கெட்ட செய்தி என்னவென்றால், நீ மேலே இருந்து கீழே விழுந்து கொண்டு இருக்கின்றாய்; பிடித்துக் கொள்ள எதுவும் இல்லை; வான்குடையும் இல்லை. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கீழே தரை இல்லை." — சோக்யம் ட்ருங்பா

வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை, புகலிடம் இல்லை, காப்பாற்ற யாரும் இல்லை. இதுதான் நம்முடைய சூழ்நிலையின் அப்பட்ட நம்பிக்கையற்ற தன்மை. நாம் இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாததால், நம் மனதில் நிறைய நம்பிக்கையை வளர்த்துக்கொள்கின்றோம். இதுதான் நம் பலவீனத்திற்கு இடம் கொடுக்கின்றது. நம்பிக்கை இருக்கும்வரை, பயமும் இருக்கும் — இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நம்பிக்கை-பயம் சுழற்சி சக்கரத்தில் நாம் சிக்கிக்கொண்டு இருக்கும் வரை, ​​நாம் தொடர்ந்து சுற்றி சுற்றி நிம்மதியின்றி ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்; அதில் உண்மையான அமைதிக்கும், சமாதானத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இடம் இல்லை. நம்பிக்கை-பயம் சுழற்சியைத் தாண்டி செல்ல, நாம் தைரியமாக வாழ்க்கையை நேரடியாக அணுகி, அறிந்து கொள்ள முனைய வேண்டும்.

வெறுமே உடல் மட்டும் வளர்ந்து வயதாகி கொண்டு செல்லாமல், தைரியமாக உள்ளது உள்ளபடியே அணுக கற்றுக்கொள்வது உண்மையான வளர்ச்சி. அது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் நிராகரிக்காமல் வாழ்க்கையை திறந்த மனதுடன் அணுகும் முறை. அது நம் வாழ்வின் ஒவ்வொரு துடிப்பையும் உணர்ந்து, முழுமையாக விழித்துக்கொண்டு, ஒவ்வொரு கணமும் உண்மையின் விளிம்பில் தங்கும் நிலை!

——

CK. காமராஜ்

20 ஜனவரி 2019 (தமிழ்)

24 செப்டம்பர் 2018 (English)