விடுதலை பெற

வலி, பயம் போன்ற உள்ளுணர்வுகள் நாம் உயிர் பிழைக்க வளர்ச்சி அடைந்த உத்திகள். அவைகளினால் எந்த பலனும் இல்லை என்றால், முதலில் அவை நம்மிடம் இருந்திருக்காது. ஆனால் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. நாம் பயத்தில் சிக்கி, அதன் பிடியில் அடித்து செல்லப்படும்போது, ​​பகுத்தறிவற்ற முடிவுகளை எடுத்து துன்பப்படுகிறோம். அதே சமயம், நாம் அதை முட்டாள்தனமாக புறக்கணித்தால், நாம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். இத்தகைய அறியாமையை தைரியம் என்று பலர் கருதுகிறார்கள். நிதர்சனம் நம் கதவை பலமாக தட்டாதவரை, அறியாமை ஆனந்தம் போல் தோன்றலாம், ஆனால் அது நம்முடைய எல்லா துன்பங்களுக்கும் மூலமாகும். இந்த பக்கமோ அல்லது அந்த பக்கமோ விழுவது மிகவும் எளிதானது. சரியான சமநிலையைக் கண்டறிய நிறைய விழிப்புணர்வும் புரிதலும் தேவை.

சத்தியம், உண்மை நமக்கு விடுதலை தரும். ஆனால் அதை யாரிடமிருந்தும், எந்த புத்தகத்திலிருந்தும் கடன் வாங்க முடியாது. அப்படி வாங்குவது வெறும் செய்தி அல்லது நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கைகள் நமக்கு விடுதலை தராது, அவை நம்மை சிறை படுத்தும். நம்முடைய சொந்தமான புரிதல், நாமாக கண்டறியும் சத்தியம் மட்டுமே நமக்கு விடுதலை தரும். மற்றவர்கள் நமக்கு வழியைக் காட்டலாம், உதவி செய்யலாம். ஆனால் நாம் தான் நமக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கைகளில் சிக்கிக் கொள்வது முட்டாள்தனத்தின், சோம்பேறித்தனத்தின் குறுக்கு வழி.

ஒரு வரலாற்று நிகழ்வு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. அன்றாடம் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளில் சிக்கிக்கொள்வதை தாண்டி, வழக்கமான அரசியல், மதவியல் விளையாட்டுகளை தாண்டி, இதை நம் ஆர்வத்தை கூர்மைப்படுத்தவும், வாழ்க்கையின்... நிதர்சனத்தின் சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தலாம். இதைச் செய்ய நாம் ஒரு மருத்துவராக, விஞ்ஞானியாக அல்லது நிபுணராக இருக்க வேண்டியதில்லை. அனைத்து சிறிய, நுணுக்கமான விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது அடிப்படையில் மனிதர்களாக நாம் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கான, எப்படி நாம் மற்ற அனைத்துடனும் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதற்கான ஒரு தேடல். இத்தகைய புரிதல் நம்முடைய பல சங்கிலிகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

சமூக வலைத்தளங்களில் பலவகை சவால் விளையாட்டை செய்கின்றார்கள். சாதாரண அடிப்படை புரிதலுக்கான ஒரு எளிய சவால்:

  • இயற்கை தேர்வுமுறை பரிணாம வளர்ச்சி (Evolution by natural selection). அனைத்து உயிரினங்களும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன...

  • அடிப்படை மூலக்கூறு உயிரியல் (Molecular biology), ஒரு உயிரணுவின் அமைப்பு மற்றும் செயல்முறை. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA), மரபணு (Gene), மரபணு குறியீடு (Genetic Code). மரபணு புரத தொகுப்பு (Gene protein synthesis).

  • வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகள். டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ வைரஸ்கள். அவை எவ்வாறு நோயை ஏற்படுத்துகின்றன...

  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics), வைரஸ் தடுப்பு மருந்துகள் (Antiviral drugs), தடுப்பூசி (Vaccine). நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது...

——

CK. காமராஜ்

04 மே 2020 (தமிழ்)

04 மே 2020 (English)