ஞானம் எனும் நுண்ணறிவு

அறிவும், ஞானமும்

  • தகவல்திறன் (Knowledge) என்பது தகவல்களை/செய்திகளை சேகரிப்பது. பல்வேறு தகவல்களை மனதில் பதியவைப்பது, மனப்பாடம் செய்வது. பொதுவாக இதை அறிவு என்றே தமிழில் குறிக்கப்படுகின்றது.

  • அறிவு (Intelligence) என்பது சேகரித்த செய்திகளை கொண்டு புரிந்து கொள்வது மற்றும் அதை முறையாக பயன்படுத்துவது. இது ஒன்றின் காரண காரியங்களையும், அதன் பல்வேறு தொடர்புகளையும் மற்றும் விளைவுகளையும் புரிந்து கொள்வது.

  • ஞானம் (Wisdom) என்பது மனம் மற்றும் வாழ்வியல் தொடர்பான அறிவின் நுட்பமான வெளிப்பாடு. இது நம்முடைய அறியாமையினால் ஏற்படும் துன்பங்களை தெளிவாக அறிந்து, அதிலிருந்து விடுபடும் அறிவு.

ஞானம் என்பது மிகவும் நுட்பமானது (நுண்ணறிவு) என்பதால் சில நுட்பமான வேறுபாடுகளையும் கண்டு கொள்வது நன்று.

சிற்றின்பமும், பேரின்பமும்

இன்பத்தை சிற்றின்பம், பேரின்பம் என பிரித்து எடை போடத் தேவையில்லை. எல்லா இன்பத்தையும் முறையாக அனுபவிப்பதில் எந்த குறையும் இல்லை. ஆனால் தற்காலிக இன்பம் தருபவை –அல்லது– மேன்போற்காக இன்பம் போல் தோன்றுபவை, நீண்ட ஆழ்ந்த துன்பமாக இருக்கலாம். உதாரணமாக ஆசை, அகங்காரம், ஆவேசம், வெறுப்பு, போட்டி, பொறாமை போன்றவை. பலநேரம் அதன் முழுமையான குணம் தெரியாமல் அதில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றோம். அதற்கு நுட்பமான புரிதல், ஞானம் தேவைப்படுகின்றது. மற்றும் பலநேரம் அதன் குணம் ஓரளவு நன்றாக தெரிந்து இருந்தாலும், அந்த நேரத்தில் ஏற்படும் கவலையை, மன-இறுக்கத்தை முறையாக கையாளத் தெரியாமல், அதில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றோம். அப்படியே மது, புகை பிடித்தல், மற்றும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் அடிமையாகி விடுகின்றோம்.

சிற்றின்பம் என்று சொல்லி சிலவற்றை நாம் முறையின்றி கட்டுப்படுத்தும் போது, அது உள்ளே புற்றாக வளருமே தவிர, அதைத் தாண்டி சென்று மேலும் நுட்பமான பேரின்பத்தை அனுபவிக்க வழி கிடைக்காது. பலர் ஆன்மீகம் என்ற பேரில் பலவற்றை அடக்கி கொண்டு தங்களை தேவையின்றி வாட்டிக்கொள்கின்றனர். சிற்றின்பமும் இயற்கையின் படைப்பில் ஒரு அங்கமே; அதை எதிர்க்கும் போது நாம் தோற்றுப்போகின்றோம். வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்பங்களையும் முறையாக அனுபவிக்கும் போது அவை நம்மை சிறைப்படுத்துவதில்லை. எதையும் அடக்கியும் வைக்காமல், அதே நேரம் அதில் கண்மூடித்தனமாக விழுந்தும் விடாமல் விழிப்புணர்வுடன் திறனுடன் கையாளும் முறையே தெளிந்தறிநிலையின், தியானத்தின் அடிப்படை.

ஆன்மீகத்தில் பேரின்பம் என்பது “நான்” என்ற அகங்காரத்தை (ஈகோவை) அழித்த நிலை. அதற்கு பல வழிகள் உண்டு: ஞானம்/நுண்ணறிவு (ஞான மார்க்கம்), அன்பு/சேவை, பக்தி (பக்தி மார்க்கம்) போன்றவை. விவேகானந்தர் சொல்வது போல்: உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அன்பு, தெளிவு, தைரியம், ஞானத்தை வேண்டிக்கொள், மற்றவையெல்லாம் சுயநலம், ஈகோத்தனம். நம்பிக்கை என்பது போதை போன்ற ஒரு மயக்கம். இதை பேரின்பம் என்றும் பலர் ஏமாறுகின்றனர். அதில் பலர் சிக்கிக்கொள்கின்றனர். அதை முறையாக அறிந்து கொள்வதும் ஞானத்தின் நுட்பம்.

பாவமும், புண்யமும்

பாவம், புண்யம் என்பதெல்லாம் ஆன்மா, கர்மா போன்ற அரையும்-குறையுமாக புரிந்து கொண்ட கருதுகோள்களின் அடிப்படையில் ஏற்பட்டவை. நுட்பமான ஞானத்தோடு இதை பார்த்தால், சில செயல்கள் நமக்கும், மற்றவருக்கும் தீங்கு செய்வதாக, துன்பம் தருவதாக இருக்கும். அவை ஆரோக்கியமற்றவை –அல்லது– முழுமையற்றவை (Unwholesome). நமக்கும், மற்றவருக்கும் நன்மை பயப்பவை ஆரோக்கியமானவை –அல்லது– முழுமையானவை (Wholesome).

பரிசுத்தவான்களும், ஈனப்பிறவிகளும்

நம்மை, நம்முடைய செயல்களை மரபணு, உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகள், சுற்று சூழ்நிலைகள் போன்ற பல காரணங்கள் நிர்ணயிக்கின்றன. ஒருவர் ஆரோக்கியமற்ற செயல்களை செய்வதற்கு காரணம், அவரின் ஞானம் இன்னும் தெளிவு இன்றி, முழுமையான புரிதல் இன்றி இருப்பதே காரணம். இதில் யாரையும் பரிசுத்தவான்கள்/புனிதர்கள் என்று போற்றுவதோ –அல்லது– ஈனப்பிறவிகள்/பாவப்பட்ட ஜென்மங்கள் என்று தூற்றுவதோ தேவையில்லை; இரண்டுமே நம் அறியாமையின் வெளிப்பாடே. இரண்டுமே ஈகோத்தன்மையின் வெளிப்பாடே. உண்மையான ஞானம் பெற்றவர் யாரையும் எடைப்போடாமல் அன்பின் உருவமாக, அறியாமை இருளில் ஞான-ஒளியாக இருப்பார்.

யாரையும் எடைப்போடாமல், ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு, அன்புடன் அணுகுவதே நம்முடைய ஆரோக்கியமான செயலாக இருக்கும். அதுவே மற்றவருக்கும், நமக்கும் தெளிவை, ஞானத்தை கொடுக்கும். அடுத்தவரை குறைகூறுவதை விட, நம்மினுள் உள்ள பல ஆரோக்கியமற்ற குணங்களை, பழக்கங்களை கண்டு கொண்டு அதிலிருந்து விடுபட்டு தெளிவு காண முயற்சிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்கும்.

——

CK. காமராஜ்

20 நவம்பர் 2020

சிற்றின்பம், பேரின்பம் என்று

பாவம், புண்யம் என்று

பரிசுத்தவான், ஈனப்பிறவி என்று

எடைப்போட்டு குறை கூறி

சிறுமை பெருமை படுத்தி

குழம்பி போய் அறியாமையில்

அகங்காரம் வளர்ப்பதல்ல

ஞானம் எனும் நுண்ணறிவு

Just A Fun Contemplation:

  • Knowledge is knowing that tomato is edible like vegetables.

  • Intelligence is understanding that it is a fruit.

  • Wisdom is not putting it in a fruit salad.

  • Philosophy is wondering if that means ketchup is a smoothie.