நம்பிக்கை மயக்கம்

மது நல்ல மருந்தும் அல்ல.

நம்பிக்கை நீடித்த தீர்வும் அல்ல.


நம்பிக்கை சாரமற்ற மாயை,

தைரியத்தின் போலி மாற்று.

தன்னம்பிக்கை இல்லையேல்,

கண்டவற்றில் நம்பிக்கை வரும்.

தன்னம்பிக்கை இல்லையேல்,

பிற-நம்பிக்கை பயனற்று போகும்.


ஆசை இருக்கும் வரை,

அவலமும் இருக்கும்.

எதிர்பார்ப்பு இருக்கும் வரை,

ஏமாற்றமும் இருக்கும்.

நம்பிக்கை இருக்கும் வரை,

பயமும் இருக்கும்.


பயந்து ஒளியும் போது,

அன்பும் போகும்.

நிதர்சனத்தை மறுக்கும் போது,

நிம்மதியும் போகும்.

மதுவைப் போலவே, நம்பிக்கையும் குறுகிய, ஆனால் எளிதாக விரைந்த அனுகூலங்களை தருகின்றது. எனவே நாம் அதை எளிதாக பற்றிக்கொள்கின்றோம். இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால், மக்கள் நம்பிக்கையை அதிமுக்கிய உத்தியாக தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர். பெரும்பாலான ஆன்மீக பாதைகளில் நம்பிக்கை அடிப்படை பண்டமாக விற்கப்பட்டு, மீண்டும் ஈகோ வளர்ச்சிக்கும் அறியாமைக்கும் வித்திடுகின்றன. நம்பிக்கை நம் பலவீனத்தை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்கின்றது.

நம்பிக்கை எந்த சாராம்சமும் அற்ற, உண்மையும் அற்ற ஒரு மாயை. அது யதார்த்தத்தை உள்ளது உள்ளபடியே எதிர்கொள்ள திறன் இல்லாத போது, நாம் தப்பிக்க பயன்படுத்தும் ஒருவகை பொறி. நாம் நம் பிரச்சினையிலிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கும்போது, ​​அது பயத்தை உருவாக்குகிறது. நம்பிக்கை பயத்தின் மறுபக்கம். நம்பிக்கையும் பயமும் மாறி மாறி, அதன் சுழற்சியில் நாம் எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்; அதில் ஒருபோதும் ஆழ்ந்த அமைதியோ, நிம்மதியா, நல்வாழ்வோ காண முடியாது.

மது ஒரு உடலியல் போதை, அதன் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு ஓரளவு நல்ல புரிதலும் விழிப்புணர்வும் உண்டு. மதுவை ஒரு நல்ல மருந்து என்று யாரும் நினைப்பதில்லை, சொல்வதில்லை. அப்படி இருந்தும், அதற்கு மக்கள் எளிதாக அடிமையாகி விடுகின்றனர். அது உண்டாக்கும் உடல்நல கேடு, குடும்ப சீரழிவு, சமூக பிரச்சினைகள் மற்றும் இறப்புகள் மிக அதிகம்.

நம்பிக்கை என்பது ஒரு உளவியல் போதை, அதன் நுட்பமான, சிக்கலான, நீண்ட-கால விளைவுகளைப் பற்றிய தெளிவான புரிதலோ விழிப்புணர்வோ மக்களுக்கு இல்லை. அதனால் அறியாமையில் அதன் பெருமை பேசி கொண்டு உள்ளனர். ஆனால், அது நம்முடைய துன்பங்களுக்கான அடிப்படை காரணம். உலகம் இன்னும் நம்பிக்கை எனும் மயக்கத்தின் பிடியில் மிக கெட்டியாக சிக்கி உள்ளது!

——

CK. காமராஜ்

12 ஏப்ரல் 2020 (தமிழ்)

15 ஏப்ரல் 2020 (English)