தப்பு கணக்கு

இது எப்படி வந்தது?

இது Whatsapp-ல் வந்த கணக்கு. இது எப்படி என்று புரிய வில்லை என்றால், தயவு செய்து நன்றாக முயற்சிக்கவும்.

புரிந்தது என்றால், அல்லது நன்றாக முயற்சி செய்தும் முடியவில்லை என்றால் தொடரவும்...

இன்னும் புரியவில்லை என்றால்:— அனைத்து செலவையும் கூட்டினால் மொத்தம் வரும்; ஆனால் பாக்கியை கூட்டினால் மொத்த தொகை வரும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? உதாரணமாக, Top-up விற்கு 50 ரூபாய் முழுவதும் செலவு செய்தால், பாக்கியை கூட்டினால் வெறும் பூஜ்ஜியம் தான் வரும்!

இது கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ ஜோக்கை விட எளியது. ஆனாலும் பலர் ஏமாந்து போகின்றனர். நாம் அவ்வளவு பெரிய மடையர்கள் இல்லை என்றாலும், ஏன் ஏமாந்து போனோம்? நம்முடைய எதிர்பார்ப்பு! எதனால் ஏற்பட்டது இந்த எதிர்பார்ப்பு? ஏனெனில், 51 என்பது மொத்த தொகை 50-க்கு அருகில் உள்ளது; மேலும் இது அளிக்க பட்ட விதம். மனிதர்கள் ஏமாந்து போவதற்கும், மூடத்தனமாக நம்புவதற்கும் கோடிக்கணக்கான வழிகள் உண்டு; அதில் ஒன்று இது!

எதிர்பார்ப்பு எனும் அவலம்

எதிர்பார்ப்பு, ஆசை, பயம் போன்றவற்றின் வலையில் நாம் சிக்கிக் கொள்ளும் போது, சாதாரண உண்மை கூட நமக்கு சரியாக புலப்படுவதில்லை. பலநேரம் நாம் உண்மையை அப்படியே தலைகீழாக புரிந்து கொள்கின்றோம். அதனாலேயே நாம் தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈகோவை வளர்க்கின்றோம். பெற்றோர்களும், பள்ளிகளும், மதங்களும் அதையே கற்றுத் தருகின்றன.

பெற்றோர்கள் குழந்தைகள் மீதும், குழந்தைகள் பெற்றோர் மீதும் நோக்கும் எதிர்பார்ப்புகள் விசித்திரமானது. மற்ற விலங்குகளும், பறவைகளும் இயல்பாக நேர்த்தியுடன் செய்வதை, மனிதர்கள் எதிர்பார்ப்புகளை திணித்து தனக்கும், அடுத்தவர்களுக்கும் ஏற்படுத்தும் துயரங்கள் ஆயிரம்.

சுயநலமும் தியாகமும்

கண்டமேனிக்கு ஆத்திரமாக, கெட்ட வார்த்தைகளில் திட்டும் மகனிடம், தாய் கேட்கின்றாள், "ஏன் இப்படி மரியாதை இல்லாமல் திட்டுகின்றாய்? பத்து மாதம் உன்னை பெத்து, உன்னை வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்." அதற்கு மகன் கேட்கின்றான், "பெத்துக்க சொல்லி நானா கேட்டேன்?". ஒரு தாயின் பாசம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள கூறப்பட்ட ஒரு கதையை கொண்டு, அவன் ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்ற அவனுடைய எதிர்ப்பார்ப்பை சொல்கின்றான்:

காதல் மோகத்தில் சிக்கியவனிடம் அவன் காதலி அவனுடைய தாயின் இருதயத்தை கேட்கின்றாள். மகனுக்காக தாயும் தன் இருதயத்தை அறுத்து தருகின்றாள். அவன் அதை எடுத்துக்கொண்டு காதலியிடம் ஓடும் போது ஒரு கல் தடுக்கிக் கீழே விழுகின்றான். அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து தாயின் இருதயம் பதறி கேட்டது, "ஐயோ! வலிக்கிறதா மகனே!"

அன்பின் அடித்தளம் புரிதல்

சுயநலமாக இருப்பதோ அல்லது நம்மையே தியாகம் செய்வதோ, நமக்கோ அடுத்தவருக்கோ நிலைத்த நன்மையோ, மகிழ்ச்சியோ தருவதில்லை. இரண்டுமே அறியாமையின், ஈகோவின் வெளிப்பாடே! உண்மையான அன்பு நம் சுய-அன்பிலிருந்து வெளிப்பட வேண்டும். நம்மை முறையாக புரிந்து கொண்டு அக்கறையோடு கவனித்து கொள்ளும் போது, அதே போல் மற்றவர்களையும் முறையாக புரிந்து கொண்டு கவனித்துக் கொள்ளும் தெளிவு வரும். அப்போது பாசம் என்ற பெயரில் நம் ஆசையை, எதிர்ப்பார்ப்பை, தேவையை அடுத்தவரின் மேல் திணிக்க மாட்டோம்; அல்லது பாசம் என்ற பெயரில் நம்மையே தியாகம் செய்ய மாட்டோம். சுய-அன்பிற்கும், சுயநலத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக புரிந்து கொள்ளாதவரை, அது நம் கோடி துயரங்கள்!

அன்பின் ஆழம், வீச்சு, ஆற்றல் மிக அதிகம். ஆனால்...

  • உணர்ச்சிவசப்படுவதோ, கவலைப்படுவதோ, அல்லது பரிதாபப்படுவதோ அன்பு அல்ல. அன்பு இருக்கும் இடத்தில் துயரம், பயம் இருப்பதில்லை; துயரம், பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருப்பதில்லை.

  • மற்றவரை நம் உடைமையாக்குவதோ, ஆதிக்கம், அதிகாரம் செலுத்துவதோ அன்பு அல்ல. அது சுதந்திர பறவையை கூண்டில் அடைப்பது போன்றது; தங்க கூண்டு என்றாலும், அது சிறைதான். உண்மையான அன்பு சுதந்திரத்தை தடுப்பதில்லை; ஏனெனில் மகிழ்ச்சியின் அடிப்படை சுதந்திரம்.

  • கடமைக்காக, பொறுப்புக்காக செய்வதெல்லாம் உண்மையான அன்பு அல்ல; அதில் அனைவருக்கும் துயரமே மிஞ்சும்!

எதிர்பார்ப்பு எனும் விஷம்

ஒன்றை நாம் எதிர்பார்த்து ஆசைப்படும் போதே அதில் விஷம் சேர்ந்து விடுகின்றது. அது கிடைக்காவிட்டால் துயரம்; கிடைத்தால் திருப்தியின்மையினால் ஏற்படும் ஏமாற்றம். ஒன்றை நாம் எதிர்பார்க்கும் போது, அதை நாம் முழுமையாக, மகிழ்வுடன் அனுபவிக்கவோ, மதிக்கவோ முடியாது. ஆசையை, எதிர்பார்ப்பை திருப்திப்படுத்துவது இயலாத காரியம். எதிர்பார்த்து ஆசைப்படும் அதே கணத்தில், நம் மனம் அதன் தெளிவான நிலையில் இருந்து திட்டங்கள், கனவுகள், நம்பிக்கைகள் என பல துண்டுகளாக சிதறடிக்கப்படுகிறது; அதன் இணக்கம் உடைந்து போகின்றது; அங்கு அமைதிக்கு, மகிழ்ச்சிக்கு இடம் இல்லை.

நாம் மரியாதையை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் போதே, நாம் நம் சுய-மரியாதையை இழந்து விடுகின்றோம். அன்பை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் போதே, நாம் பிச்சைக்காரனாகி விடுகின்றோம். நம்பிக்கையை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் போதே, ஏமாற்றத்தை விதைக்கின்றோம். எதிர்பார்ப்பது சுயநலத்தின், ஈகோவின், அறியாமையின், அவலத்தின் வெளிப்பாடு. கொடுப்பது அன்பின், தெளிவின், மகிழ்வின் வெளிப்பாடு. அன்பு ஒரு உண்மையான அமுதசுரபி; அதை கொடுக்க, கொடுக்க மேலும் வளரும்! எதிர்பார்க்கும் போது, அது வறண்டு போய் அவலமே மிஞ்சும்!

——

CK. காமராஜ்

24 மார்ச் 2021