மகிழ்ச்சிக்கான பயிற்சி

மகிழ்ச்சி என்பது பயிற்சி. அது எப்படி பட்ட பயிற்சி? முதலில் நம் பார்வையும், நோக்கமும் நன்றாக இருக்க வேண்டும். நம் பார்வை ஆசை, பயத்தை தாண்டி, உள்ளது-உள்ளபடியே அறிவதை நோக்கி இருக்க வேண்டும். எதிலும் முரட்டுத்தனமான பற்று இன்றி, குருட்டுத்தனமான நம்பிக்கை இன்றி நிதானமாக, அறிவுடன் அணுகுவதாக இருக்க வேண்டும். நம் நோக்கம் சுயநலத்தை தாண்டி, "தான்" என்ற அகங்காரத்தை, அதிகாரத்தனத்தை தாண்டி அன்பு, அக்கறை நோக்கி இருக்க வேண்டும். [இரண்டும் ஓன்றே]

அதன் படியே, நம் வார்த்தைகள் (பேச்சு, எழுத்து) மற்றும் செயல்கள் அமைதி, அன்பு, சமாதானம், நல்லிணக்கத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். பொய், புறம் பேசுவது, கடும் சொற்கள், கெட்ட வார்த்தைகள், வதந்திகள் போன்றவற்றை களைந்தெறிய வேண்டும். யாருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள், நேர்மையற்ற செயல்கள், மறைத்து செய்யும் மொள்ளமாரித்தன செயல்கள் போன்றவற்றை களைந்தெறிய வேண்டும். [தெளிவாக அறிந்து செய்தல்]

பிறகு சரியான மனப்பயிற்சியான தியானம் அவசியம். முறையான தியானம் இன்றி மனதில் ஆழ்ந்த தெளிவோ, திடமோ, அறிவோ வளர்வதில்லை. அதனால் நம் பார்வை பிசகும். நம் நோக்கம் நன்றாக இருந்தாலும் திடம், பயிற்சி இன்றி நம் செயல்கள், வார்த்தைகள், எண்ணங்கள் அதே குட்டையில் மீண்டும், மீண்டும் விழும். அங்கு உண்மையான மகிழ்ச்சி வளர்வதில்லை. முறையான குதிரை பயிற்சியின்றி மகிழ்ச்சியாக குதிரை சவாரி செய்ய முடியாது – பரிதாபமாக மீண்டும் மீண்டும் கீழே தான் விழுவோம். முறையான பயிற்சியின்றி போரில் வெற்றி கொள்ள முடியாது – தோற்றுத் தான் போவோம். [அணுகுமுறை தடைகள், படுகுழிகள்]

இது புத்தரின் எண்முகப் பாதையின் சுருக்கம். எண்முகப் பாதையின் எட்டு நெறிகளை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம்.

[ஞான நெறிகள்]

  • 1) சரியான பார்வை

  • 2) சரியான நோக்கம்

[ஒழுக்க நெறிகள்]

  • 3) சரியான வார்த்தை (பேச்சு, எழுத்து)

  • 4) சரியான நடத்தை

  • 5) சரியான வாழ்வாதாரம்

[தியான நெறிகள்]

  • 6) சரியான முயற்சி

  • 7) சரியான தெளிந்தறிநிலை (பாலி மொழியில் சத்தி)

  • 8) சரியான ஒருமுகப்படுத்துதல் (தியான மொழியில் சமாதி அல்லது ஆழ்ந்த மனஅமைதி)

  • [ஞான நெறிகள்] நம்மை சரியான திசையில் செல்ல வைப்பவை. நாம் செல்லும் திசையே தவறாக இருந்தால், அதில் அவலமும் துயரமும் தான் மிஞ்சும்.

  • [ஒழுக்க நெறிகள்] நாம் செல்லும் வழிமுறையை, நடத்தையை சுட்டிக் காட்டுகின்றது. நம் வழிமுறை சரியில்லாத போது, அதில் சிக்கி மாட்டிக்கொள்வது மட்டுமில்லாமல், நாம் செல்லும் திசையும் தவறி போகின்றது. மேலும் முறையற்ற நடத்தை வாழ்வை, மனதை சீரழிப்பதால் அங்கு தியானமோ, அமைதியோ, தெளிவோ எளிதாக ஏற்படுவதில்லை.

  • [தியான நெறிகள்] நமக்கு மனதில் தெளிவையும், ஞானத்தையும் தருகின்றது – அதனால் நாம் செல்லும் திசையும், வழிமுறையும் நேர்படும். மேலும் மனிதில் திடமும், ஆற்றலும் பெருகும் – அதனால் நாம் தைரியமாக நேர் வழியில் செல்ல முடியும், வாழ்வின் துன்பங்களை தேர்ச்சியுடன் எதிர் கொள்ள முடியும்.

அமைதியும் , மகிழ்ச்சியும், அன்பும் இணக்கமும் எங்கும் பெருகட்டும்!